ஈசாம்: ஹரபான் பிரதமர் வேட்பாளராக அஸ்மினை அறிவிக்கலாம்

பிகேஆர்  துணைத்   தலைவர்   முகம்மட்  அஸ்மின்  அலியைப்  பிரதமர்   வேட்பாளராகவும்   பெர்சத்து   உதவித்   தலைவர்    முக்ரிஸ்   மகாதிரைத்   துணைப்  பிரதமர்   வேட்பாளராகவும்   பெயர்  குறிப்பிடுவது   குறித்து   பக்கத்தான்   ஹரபான்   ஆலோசிக்க   வேண்டும்   என   பிகேஆரின்  முன்னாள்  இளைஞர்  தலைவர்   ஈசாம்   முகம்மட்  நோர்   முன்மொழிந்துள்ளார்.

ஹரபான்   புது  முகங்களைக்  களமிறக்க  வேண்டும்.  அக்கூட்டணியில்  திறமைக்குப்  பஞ்சமில்லை   என்றாரவர்.

டாக்டர் மகாதிர்  முகமட்டைப்  பிரதமர்  வேட்பாளராகவும்    டாக்டர்   வான்  அசிசா  வான்  இஸ்மாயிலைத்  துணைப்   பிரதமர்    வேட்பாளராகவும்    அறிவிக்கும்   முயற்சியில்      ஹரபான்   தடுமாறிக்  கொண்டிருக்கும்   வேளையில்   ஈசாம்  இப்படி   ஒரு  பரிந்துரையை  முன்வைத்துள்ளார்.

ஹரபான்,  நாளை   கூடிப்பேசி,  ஜனவரி  7இல்    நடைபெறும்   அக்கூட்டணியின்    தேசிய   மாநாட்டில்  பிரதமர்  வேட்பாளர்  குறித்து   அறிவிக்கும்   என   எதிர்பார்க்கப்படுகிறது.

“ஹரபான்  துணிந்து  அஸ்மினைப்  பிரதமர்   வேட்பாளராகவும்   முக்ரிசைத்   துணைப்  பிரதமர்   வேட்பாளராகவும்  பெயர்  குறிப்பிட    வேண்டும். நுருல்  இஸ்ஸா    அன்வார்   போன்ற  மற்றோரும்  உள்ளனர். இவர்கள்  அனைவரும்  புத்ரா  ஜெயாவில்     ஓர்   இணக்கமான  குழுவாக  செயல்பட  முடியும்”.  என  ஈசாம்  கூறினார்.

அஸ்மின்  சிலாங்கூர்   மந்திரி  புசாராக    சிறப்பாக     செயல்பட்டிருக்கிறார்  என்பதால்   அவரைப்  பிரதமர்   வேட்பாளராக    அறிவிப்பது   பொருத்தமானதே    என்றாரவர்.