பாஸ்: நஜிப் போக்கு நாடாளுமன்ற தேர்வுக் குழு மீதான ஆர்வத்தையே கொன்று விட்டது

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு குறித்த அரசாங்கத்தின் போக்கு அது உண்மையாக இல்லை என்பதைக் காட்டுவதால் அந்தக் குழுவில் பாஸ் பங்கு கொள்ளாமல் போகலாம்.

இவ்வாறு கூறிய பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்ய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக நிற்கும் என்றார்.

“நஜிப் முன்மொழிந்த நாடாளுமன்றத் தேர்வுக் குழு மீது எத்தகைய கடப்பாடும் தெரிவிப்பதில் ஏற்கனவே பாஸ் மிகவும் கவனமாக இருந்தது. அந்தக் குழு மீது நாங்கள் வைத்திருந்த சிறிதளவு அக்கறையையும் கூட இப்போது நஜிப் விடுத்துள்ள அறிக்கை கொன்று விட்டது,” என அவர் சொன்னார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்காகக் காத்திருக்காமல் அடுத்த பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என பிரதமர் விடுத்துள்ள அறிக்கை, அம்னோ மறும் நஜிப்பின் அகங்காரத்தை உணர்த்துகிறது என அவர் வருணித்தார்.

“அந்த அகங்காரமான அறிக்கை, குழுவை அமைக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்த போது நஜிப் நாடகமாடுகிறார் என்ற பாஸ் கட்சியின் நிலையையே வலுப்படுத்துகிறது. உண்மையில் அவரோ அல்லது அம்னோவே தேர்தல் சீர்திருத்தம் மீதான கோரிக்கைகளை எதிர்கொள்வதற்கு தீவிரம் காட்டவில்லை,” என்றார் சலாஹுடின்.

இதனிடையே தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கைககளை உலக அளவில் பரப்புவதற்கு அனைத்துலக அமைப்புக்களை பயன்படுத்திக் கொள்வது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவலையும் குபாங் கெரியான் எம்பியுமான அவர் தெரிவித்தார்.

அனைத்துலக நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இயக்கத்தின் ஒரு பகுதியாக அது அமையும் என்றார் சலாஹுடின்.

இதனிடையே தேர்தல்களை தாம் எந்த நேரத்திலும் நடத்தக் கூடும் என நஜிப் கூறியிருப்பதால் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவால் எந்தப் பயனும் இல்லை பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்யப்படாமல் நடத்தப்படும் தேர்தலின் முடிவுகள் மக்களுடைய  உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்காமல் ஆவி வாக்காளர்கள், சில கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஒன்று திரட்டப்பட்ட அந்நியர்கள் ஆகியோருடைய எண்ணத்தை பிரதிபலிக்கும் போது மக்கள் வாக்களிப்பதால் என்ன நன்மை ?” என துவான் இப்ராஹிம் வினவினார்.

நஜிப் அறிக்கைகள் நாடாளுமன்றத் தேர்வுக் குழு விஷயத்தை அர்த்தமற்றதாக்கி விட்டதால் அந்தக் குழுவில் பங்கு கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்ய பாஸ் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

அத்துடன் ஆகஸ்ட் 24ம் தேதி பக்காத்தான் ராக்யாட் கூடி அந்த விவகாரத்தை ஆய்வு செய்து நஜிப் அறிக்கைக்குப் பதில் கொடுக்கும் என்றும் துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.

TAGS: