என்எஸ்டி குழும முன்னாள் தலைமைச் செய்தியாசிரியர் கலிமுல்லா மஷீருல் ஹசான் எதிர்வரும் தேர்தலில் பிஎன்னுக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை மீண்டும் குறைந்தே இருக்கும் என ஆருடம் கூறியுள்ளார்.
ஆனாலும் பிஎன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விடாது என்றவர் சிங்கப்பூரில் ஒரு கருத்தரங்கில் கூறினார்.
“மக்கள் வாக்குகளை அதிக எண்ணிக்கையில் பெறுவதில் பிஎன்னுக்கு மீண்டும் தோல்விதான் கிட்டும். ஆனால், நடாளுமன்றத்தில் அது பெரும்பான்மையை இழக்கும் என்று நான் நினைக்கவில்லை”, என்றவர் கூறியதாக சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்தது.
ஐசீஸ்- யூசுப் இஷாக் கழகம் ஏற்பாடு செய்திருந்த வட்டார எதிர்காலம் மீதான கருத்தரங்கில் கலந்துகொண்ட இரு மலேசியப் பேச்சாளர்களில் கலிமுல்லாவும் ஒருவர்.
முன்னாள் செய்தியாளரான கலிமுல்லா பின்னர் நிறுவனத் துறைக்குமாறி அங்கு பெரிய பதவிகளையெல்லாம் வகித்தார்.முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியின் தலையாய பரப்புரையாளர்களில் ஒருவராகவும் அவர் கருதப்பட்டார்.
அப்துல்லாவின் தலைமையில் 2004இல் பிஎன் அதன் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், 2008இல் அப்துல்லாவின் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது. என்றாலும் 51விழுக்காடு வாக்குகளை அது பெற்றது.
2013-இல், பிஎன் அதிக அளவு வாக்குகளைப் பெறுவதில் தோல்வி கண்டது. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 47.4 விழுக்காட்டைத்தான் அது பெற்றது. ஆனாலும், 222 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 60விழுக்காடு இடங்களை வென்றது.