பக்கத்தான் ஹரபான் 14வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டப்படிதான் நடந்து கொள்ளும் “பழிக்குப் பழி வாங்கும் நோக்கில்” செயல்படாது என அதன் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
இன்று முகநூல் நேரடி ஒளிபரப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட எதிரணிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், முகநூல் பயனரான இந்திராவுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.
இந்திரா, அடுத்த தேர்தலில் ஹரபான் வெற்றிபெற்றால் ஒவ்வொரு பிஎன் அமைச்சரின் சொத்துகள்மீது கணக்காய்வு செய்து “அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு மகாதிர், ஹரபான் சட்ட ஆளுமையை மதிக்கும் என்றார்.
“எங்களிடம் பழிவாங்கும் எண்ணமெல்லாம் கிடையாது. சட்டப்படிதான் நடப்போம்.
“சட்டம் கொள்ளையடிப்பவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கூறினால் பிறகு நீதிமன்றம் விசாரணை செய்து உரிய தண்டனையைக் கொடுக்கும்.
“இதுதான் எங்களின் செயல்பாடாக இருக்கும். இப்போது நடப்பதுபோல் குறிப்பிட்ட சிலர்மீது அழுத்தம் கொடுப்பது எங்களின் பாணி அல்ல”, என மகாதிர் கூறினார்.
உள்நாட்டு வருமான வரி வாரியம் சில தரப்பினர்மீது கூடுதல் வரி விதிப்பதுபோல் ஹரபான் நடந்துகொள்ளாது. அதன் வழியே வேறு என்றாரவர்.