பினாங்கில் கர்னி ட்ரைவிலிருந்து பட்டர்வர்த் வரைக்குமான கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டம் திறந்த நிலை டெண்டர் மூலம் வழங்கப்பட்ட ஒரு ‘செல்லத்தக்க குத்தகை’ என்பதால் திட்டப்படி அது மேற்கொள்ளப்படும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
“நீதிமன்ற உத்தரவு பெற்றாலொழிய அது திட்டப்படி தொடரும்”, என்றவர் இன்று ஜார்ஜ்டவுனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று அத்திட்டம்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் மீண்டும் அதிரடிச் சோதனை மேற்கொண்டது குறித்து லிம் வியப்பு தெரிவித்தார். 2016-இல் அதேபோன்றதொரு சோதனையை அது நடத்தியது என்றார்.
எம்ஏசிசி நேற்று அதிரடிச் சோதனை மேற்கொண்டு இரண்டு ‘டத்தோக்களை’த் தடுத்து வைத்திருப்பது குறித்து மாநில அரசுக்குத் தெரியாது என்றார்.
ஊழல் தடுப்பு ஆணையம் நான்கு அரசுத் துறைகளிலும் மூன்று தனியார் நிறுவனங்களிலும் அதிரடிச் சோதனை நடத்தி 2023-இல் கட்டுமானப் பணி தொடங்கவிருக்கும் அந்த ரிம6.3 பில்லியன் திட்டம் தொடர்பான ஆவணங்களை அள்ளிச் சென்றது.