அன்வாரை சந்திக்க விடாமல் சிறைக் காவலர்கள் மகாதிரை தடுத்து விட்டனர்

 

செராஸ் மருத்துமனை மறுவாழ்வு மையத்தில் குணமடைந்து வரும் அன்வார் இப்ராகிமை பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் சந்திப்பதலிருந்து இன்று மாலை சிறைக் காவலர்களால் தடுக்கப்பட்டார்.

இதற்கான உத்தரவு உள்துறை அமைச்சிடமிருந்து வந்ததாக தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவரைச் சந்தித்து நான் வேட்பாளராவதற்கு (பிரதமர் பதவிக்கு) எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததற்கு, உண்மையில் ஆதரவு தெரிவித்ததற்கு, நன்றி கூற விரும்பினேன்”, என்று மகாதிர் கூறினார்.

மருத்துவமனை வருகைக்கு தடை போடும் தற்போதைய நிருவாகம் குறித்து மகாதிர் வருத்தம் தெரிவித்தார்.

“நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த காலத்தில் இது போன்றவை நடந்ததேயில்லை. நான் யாரையும் எவரும் சந்திப்பதற்கு தடைவித்ததில்லை.

“ஆனால் (இப்போது) மக்களைக்கூட சந்திக்க முடியாது, நோயுற்றவர்களைக்கூட சந்திக்க முடியாது. இது நமது நாட்டின் நிலைமையாக இருக்கிறது”, என்று மகாதிர் மேலும் கூறினர்.