மலேசிய சோசலிசக் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி, ’99 விழுக்காட்டினருக்கான தேர்தல் அறிக்கை’-ஐ இன்று வெளியிட்டது.
ஒரு வருடத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், 18 முக்கியப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் இலக்கோடு, 6 கூறுகள் கொண்ட அத்தேர்தல் அறிக்கையை, இவ்வாண்டு நடைபெறவுள்ள 14-வது பொதுத் தேர்தலுக்காக இடதுசாரி கூட்டணி வெளியிட்டுள்ளது.
வளங்களை நியாயமாக விநியோகித்தல், இலவசப் பல்கலைக்கழகக் கல்வி, கண்ணியமான ஊதியம், உயர்தர வீடுகள், அரசு சிறப்பு நிதியிலிருந்து ஓய்வூதியம், உயர் தொழில்நுட்பப் பச்சை பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் போன்றவை அந்த 6 கூறுகள் ஆகும்.
அந்த 18 பிரச்சனைகளும் 4 முக்கியக் கருப்பொருளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
‘மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான அபிவிருத்தி’ என்ற தலைப்பிலான முதல் கருப்பொருளின் கீழ், இடதுசாரி கூட்டணி முற்போக்கான பொருளாதாரக் கொள்கை, நிலையான மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உள்கட்டுமானம் மற்றும் வட்டார மேம்பாட்டுத் திட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது.
‘ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள்’ என்ற கருப்பொருளின்கீழ், உண்மையான ஜனநாயகம், தகவல் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சட்ட விதி, இனம், பாலினம், வயது, மதம் மற்றும் பாலியல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட சம உரிமைகள்; ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான ‘பூஜ்ஜிய’ சகிப்புத்தன்மை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
வளங்களை நியாயமாக விநியோகித்தல் எனும் கருப்பொருளின் கீழ், சமமாக நாட்டின் வளங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் விவரங்கள் அடங்கியுள்ளன.
‘மக்கள் மற்றும் கலாச்சாரம்’ என்ற கருப்பொருளின் கீழ், பெண்கள் உரிமைகள், தொலைநோக்கு மற்றும் நியாயமான கல்விகொள்கை, மேம்பட்ட பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு, மக்கள் மையமான சமூகக் கொள்கை, பூர்வக்குடி மக்களின் உரிமைகள் மற்றும் நிலத்திற்கான ஆதரவு, பல்வேறு கலாச்சாரக் கொள்கைகளை இடதுசாரி கூட்டணி ஆதரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மற்றக் கட்சிகளும், இத்தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் என்று இடதுசாரி கூட்டணி நம்புகிறது.
“இத்தேர்தல் அறிக்கை, இனப்பாகுபாடற்ற மலேசியாவை நம்மால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வித்திட்டுள்ளது,” என்று அக்கூட்டணி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த இடதுசாரி கூட்டணியில் அரசியல் கட்சியான பி.எஸ்.எம்., 12 இடதுசாரி அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் அங்கத்துவம் பெற்றுள்ளன.
உங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்ததும் கொஞ்சம் சிரிக்கலாம் போல தோன்றுகிறது காரணம் முன்பு தேர்தலில் உங்களின் அறிக்கைகள் என்ன? அதில் எத்தனை சதவிதம் மக்களுக்கு முழுமையாக உங்கள் கட்சி சார்பாக சேவைகள் செய்து வெற்றி கண்டு உள்ளீர்கள். அதை தயவு செய்து சொன்னால் சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி அடைவோம். அடுத்து டாக்டர் ஜெயக்குமார் அவர்கள் ஒரு அறிக்கை பத்திரிகையில் படித்ததாக ஞாபகம். அதாவது சுங்கை சிப்புட் தொகுதிக்கு மானியம் கிடைக்க வில்லை அதலால் என்னால் சேவைகள் செய்ய சிரமமாக உள்ளதாக டாக்டர் சொன்னதாக படித்த தாக அறிகிறேன். அப்படி இருக்கையில் மறுபடியும் அந்த தொகுதியில் வென்றால் என்ன நடக்கும். அதை வைத்து பார்க்கும்போது எப்படி மறுபடியும் ஒரு அறிக்கை உங்களால் கொடுக்க முடிகிறது. நாங்கள் எதிர்பார்ப்பாது நீங்கள் எத்தனை நாடாளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதியில் நிற்கிறிர்கள் என்ற போன்றவைகளை மக்களுக்கு முன்னதாகவே சொன்னால் சந்தோஷம். உங்கள் கட்சியில் சார்பாக அறிக்கை விடும் மன்னர்கள் முன்னதவே நல்ல கலந்து ஆலோசித்து மக்களுக்கு அறிக்கை விட்டாள் மிக்க மகிழ்ச்சி அடைவோம். செய்விர்களா…….நன்றி