இருமொழித் திட்டத்தை அமல்படுத்தும் தமிழ்ப்பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், பணிப்படை சூளுரைக்கிறது

 

இருமொழித் திட்டம் சட்டவிரோதமானது, அரசமைப்புக்கு முரணானது. அத்திட்டத்தை அமல்படுத்தும் தமிழ்ப்பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள “தமிழ் எங்கள் உயிர்” என்ற பணிப்படை சூளுரைக்கிறது.

தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் போதனை மொழியாக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பட்டுள்ள உரிமையை இந்த இருமொழித் திட்டம் மீறுகிறது என்று இப்பணிப்படையின் ஒருங்கிளைப்பாளர் கா. ஆறுமுகம் கூறுகிறார்.

“தமிழ் தொடக்கப்பள்ளிகளில் தமிழ் போதனை மொழியாக இருக்க வேண்டும் என்பதை பெடரல் அரசமைப்புச் சட்டம் அரசாங்கத்தின் கடமையாக்கியுள்ளது. கல்விச் சட்டம் 1996-ம் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் போதனை மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.

“நீங்கள் இரண்டு முக்கியமான பாடங்களை (போதனை மொழியை) – கணிதம் மற்றும் அறிவியல் – தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றக்கூடாது …இல்லையெனில் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பியல்புகள் ஆங்கிலமொழிப் போதனைப் பள்ளியாகிவிடும்.

“இதன்படி, இருமொழித் திட்டம் சட்டவிரோதமானதும் அரசமைப்புக்கு முரணானதுமாகும்.

“இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்யவிருக்கும் அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம்… அப்பள்ளிகளை சட்ட சீராய்வுக்குட்படுத்தி (அவற்றின் செயல்களின்) தன்மை அரசமைப்புச் சட்டத்திற்கு தக்கததாக இருக்கிறதா என்பதற்கு அறைகூவல் விடுவதாகும்”, என்று அவர் பெட்டாலிங் ஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இப்பணிக்குழுவினர் கல்வி அமைச்சை ஒதுக்கிவிட்டு தமிழ்ப்பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காரணம் இப்பள்ளிகள் அவர்களாகவே இருமொழித் திட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கின்றனர்.

தற்போது, தமிழ்மொழி தொடக்கப்பள்ளிகள் எட்டு அவசியம் கற்க வேண்டிய பாடங்களைப் – தமிழ், பஹசா மலேசியா, ஆங்கிலம், அறிவியல், உள்ளூர் ஆய்வுகள், குடியியல் மற்றும் குடியுரிமை ஆய்வுகள், மற்றும் நன்னெறிக் கல்வி அல்லது இஸ்லாமியக் கல்வி – போதிக்கின்றன.

அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால், நான்கு அவசியமான பாடங்கள் மட்டுமே தமிழிலில் போதிக்கப்படும்.

ஆங்கில அறிவை மேம்படுத்த இதர வழிகளைக் காண வேண்டும்.

பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதற்காகவே இருமொழித் திட்டம் பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்டது என்று அரசாங்கம் திரும்பத் திரும்ப கூறிவரும் காரணத்தை இக்குழுவினர் நிராகரித்ததோடு மாணவர்களின் ஆங்கிலமொழித் திறனை வளர்ப்பதற்கு இதர வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றனர்.

“அரசாங்கம் வழி-நடத்தும் (கல்வி) அமைவுமுறையில் முடிவெடுக்கும் செல்வாக்கோ அதிகாரமோ பெற்றோர்களுக்கு உண்டா?

“இருமொழித் திட்டம் உயர் மக்களின் ஆதிக்கம் மற்றும் பிரித்துவைத்தல் ஆகியவற்றை ஆதரிக்கிறது… வகுப்பறைக்குள் தரம் முறை, அங்கு வகுப்புகள் இருமொழித் திட்டம் மற்றும் இருமொழித் திட்டம் அல்லாதவைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இது அனைவரும் உயர்தரமான கல்வி பெற சமமான நல்வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை மீறுகிறது.

“ஆங்கிலமொழியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் ஆங்கிலத்தை போதனை மொழியாக மாற்றுவதன் வழி அல்ல”, என்று கா.ஆறுமுகம் மேலும் கூறினார்.

அடுத்து, எதிர்வரும் மார்ச்சில் சட்ட நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு முன்னால், பணிப்படை குறிவைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு எச்சரிக்கை கடிதங்களை ஜனவரி மாத இறுதிக்குள் அனுப்பும். இதுவரையில் மொத்தம் 44 தமிழ்ப்பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், கல்வி அமைச்சின் மிக அண்மையப் பட்டியலுக்காக இக்குழு காத்துக்கொண்டிருக்கிறது.

முன்னதாக, 15 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் பல உறுப்பினர்கள் பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளி இருமொழித் திட்டத்தை அமலாக்குவதற்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திலிருந்து தடையுத்தரவு பெற்றுள்ளனர். இந்த வழக்கு அடுத்து பெப்ரவரி 27 இல் செவிமடுக்கப்படும்.

2015 ஆம் ஆண்டில், அரசாங்கம் அதன் “பஹாசா மலேசியாவை நிலைநிறுத்தல் மற்றும் ஆங்கிலமொழியை வலுப்படுத்தல் (MBMMBI) கொள்கையில் முன்மொழிந்த எட்டு வியூகங்களில் ஒன்று இருமொழித் திட்டம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது 2016 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் இந்தத் திட்டத்தையும் அறிவித்தார்.

2017 ஆம் ஆண்டில், மொத்தம் 1,429 பள்ளிகள் இருமொழித் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.