மலாய்க்கார்-அல்லாதாரும் நாட்டுக்காகவும் மன்னருக்காவும் போராடியிருக்கிறார்கள்

“ஆக்கிரமிப்பாளர்களையும்    கம்முனிஸ்டுகளையும்  எதிர்த்துப்    போராடியவர்கள்  மலாய்க்காரர்கள்  மட்டுமே”  என்று  முஸ்லிம்  சங்கங்களை   ஒருங்கிணைக்கும்  உம்மா  அமைப்பின்  தலைவர்   இஸ்மாயில்  மினா  அஹமட்    கூறியதாக     வெளிவந்துள்ள   செய்திக்குக்   கண்டனம்    தெரிவிக்கப்பட்டது.

மலாய்  மெயில் ஆன்லைனில்   வெளிவந்த   செய்தி  குறித்து  கருத்துரைத்தபோது   பெர்சத்துவான்    பேட்ரியோட்   கெபாங்சாஆன்(நாட்டுப்பற்றாளர்  சங்கம்)  தலைவர்  பிரிகேடியர்- ஜெனரல்(பணி ஓய்வு) முகம்மட்  அர்ஷாட்  ராஜி   அவ்வாறு  கண்டனம்   தெரிவித்தார்.

உம்மா  தலைவர்   மலாய்க்காரர்கள்   மட்டுமே  பிரிட்டிஷாரையும்   ஜப்பானியரையும்   எதிர்த்தார்கள்   என்றும்  சிறுபான்மையினர்   நாட்டில்  இஸ்லாத்துக்கும்   மலாய்   அரசியல்    மேலாதிக்கத்துக்கும்    அபாயமாக   உள்ளனர்   என்றும்    சூழ்ச்சி  மூலம்  ஆட்சி அதிகாரத்தைக்  கைப்பற்றிப்  பிரதமர்  ஆவதற்குக்கூட   ஆசைப்படுகிறார்கள்   என்றும்   கூறியதாக   அச்செய்தி  கூறிற்று.

மினா  அஹமட்மீது  பெட்ரியோட்டுக்கு   வருத்தமில்லை.  அவர்  கூறியதாகச்  சொல்லப்படும்   விசயங்களைப்  பார்க்கையில்   அவர்   நாட்டு  நடப்பும்  வரலாறும்   தெரியாமல்   பேசியிருப்பதாகவே  தோன்றுகிறது   என  முகம்மட்  அர்ஷாட்   கூறினார்.

சமயத்தலைவர்   என்றால்  விவேகமிக்கவராக   அன்பையும்  அமைதியையும்  புரிந்துணர்வையும்   மனிதாபிமானத்தையும்   வளர்ப்பவராகவும்  இருத்தல்  வேண்டும்.  வெறுப்புணர்வை   வளர்க்கக்கூடாது.

பெட்ரியோட்  பலமுறை   சொன்னதைத்  திரும்பவும்   வலியுறுத்த   விரும்புகிறது.  சுதந்திரத்துக்கு   முன்பிருந்தே   முதலாவது,  இரண்டாவது  அவசரக்காலத்தின்போதும் ஹோம்  கார்ட்  படையிலும்   டெம்ப்ளரின்  சூப்பர்  12-இலும்     கூட்டரசு  இராணுவத்திலும்    காங்கோ  அமைதிக்காப்புப்   படையிலும்   கம்முனிஸ்டுப்   பயங்கரவாதத்தை    எதிர்ப்பதிலும்    தீவகற்ப  மலேசியாவிலும்   சாபா,  சரவாக்கிலும்   காடுகளில்   போராடுவதிலும்   மலாய்க்காரர்-  அல்லாத   அதிகாரிகளும்   ஆள்களும்-  சீனர்கள்,  இந்தியர்கள்,  சீக்கியர்கள்,  ஒராங்   அஸ்லிகள்,  இபான்கள்,   டயாக்குகள்,  கடாசான்கள்   ஆகியோர்   அவர்களில்  அடங்குவர்-   மலாய்க்காரர்களுடன்  சேர்ந்து   போராடியுள்ளனர்.

சண்டையில்  இவர்களில்  பலருக்கும்  உயிருடற்  சேதம்  ஏற்பட்டதுண்டு.  பலர்  வீரதீரப்  பணிகளுக்காக   விருதளிக்கப்பட்டுச்  சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். சிபிஎம்( மலாயா  கம்முனிஸ்டுக்  கட்சி)  ஊடுருவல்காரர்களுக்கும்   நகர்ப்புற   பயங்கரவாதிகளுக்கும்   எதிராக   நாம்  அடைந்த  வெற்றிக்குக்  பெரிதும்   காரணமாக   இருந்தது
ஸ்பெசல்  பிராஞ்ச்-  போலீஸ்  சிறப்புப்  பிரிவு-  ஆகும்.  அந்தச்  சிறப்புப்  பிரிவில்  இருந்தவர்களில்    பெரும்பாலோர்  சீனர்கள்  என்பது  குறிப்பிடத்தக்கது.

இன்னொரு  உண்மையையும்  குறிப்பிட   வேண்டும்.  சிபிஎம்  என்பது  முழுக்க  சீனர்களைக்  கொண்டதல்ல.  சிபிஎம்   பத்தாவது  பட்டாளத்தில்   இருந்தோரில்  பெரும்பாலோர்  மலாய்க்காரர்கள்.  அப்துல்லா  சிடி,  ரஷிட்  மைடின்,   சம்ஷியா  பக்கே   போன்றோர்    அதில்   இருந்தனர். மேலும்,  எம்பிஏஜேஏ (மலாயா  மக்கள்   ஜப்பானிய-எதிர்ப்பு  இராணுவம்)  ஜப்பான்  சரணடைந்த  பின்னர்     கொலைவெறியுடன்  நடந்து  கொண்டதற்கும்  பின்னர்  பிரிட்டனுக்கு  எதிராக   ஆயுதப்போராட்டத்தில்  ஈடுபட்டதற்கும்
இனவெறி  காரணமல்ல   கொள்கைவாதமே  காரணமாகும்.

ஒருவரின்     அரசியல்    ஆதாயத்துக்காக   வரலாற்றைத் திரித்துக்கூறி  மலாய்க்காரர்- அல்லாதாருக்கு  எதிராக   வெறுப்பைத்   தூண்டுவது  கொஞ்சமும்    பொறுப்பற்ற   செயலாகும்  என    முகம்மட்  அர்ஷாட்  கூறினார்.

பல்வேறு  இனத்தவரும்  நாட்டின்  எதிரிகளுடன்   போராடி   நாட்டுக்குச்  சேவையாற்றியுள்ளதை      நம்   தற்காப்பு,   உள்துறை   அமைச்சர்கள்    எடுத்துரைத்து  தவறான  நினைப்புகளைச்   சரி  செய்ய  வேண்டும்   என  பெட்ரியோட்   கேட்டுக்கொள்கிறது.

ஆயுதப்படைத்    தலைவரும்,  பொலீஸ்  படைத்    தலைவரும்கூட   அவ்வாறே   செய்ய  வேண்டும்.

நாட்டுக்காகவும்   மன்னருக்காகவும்  போராடியவர்களை   நாம்  என்றென்றும்  நினைவில்   வைத்திருக்க   வேண்டும்.  அவர்கள்   எல்லா  இனங்களையும்   சேர்ந்தவர்கள்.  அவர்களின்  வீரதீரச்  செயல்களையும்   தியாகங்களையும்   மறந்துவிடக்கூடாது.

உண்மைகள்   திரித்துக்கூறப்படுவதைப்   பார்த்துக்கொண்டு   பேசாமல்  இருந்து  விடக்கூடாது. அது  தலைவர்களுக்குரிய  பொறுப்பைத்  துறப்பதற்கு  ஒப்பாகும்     என்றாரவர்.