‘புரோட்டன் சகா’ பெயரை உருவாக்கியவர் காலமானார்

புரோட்டன் நிறுவனத்தின் முதல் காரின் பெயரை உருவாக்கியவரான, ஓய்வு பெற்ற இராணுவ வீரர், இஸ்மாயில் ஜாஃபார், முதுமை காரணமாக நேற்று மாலை, தன் வீட்டில் காலமானார்.

71 வயதான இஸ்மாயில், நாட்டின் முதல் காரின் பெயரை உருவாக்கும் போட்டியில் கலந்துகொண்ட 102,823 பங்கேற்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

1985, செப்டம்பர் 1-ம் தேதி, ‘புரோட்டன் சகா’ காரின் முதல் பதிப்பை, அப்போதையப் பிரதமர் டாக்டர் மகாதீர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.

இஸ்மாயில் ஜாஃபாருக்கு இதயநோய், சிறுநீரகம் மற்றும் நீரிழிவு நோய்களும் உள்ளதாக அவரின் மகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சமீப காலமாக அவரின் உடல்நிலை மோசமடைந்து, அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அன்னாருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்களும் இருக்கின்றனர்.