ஆயர் ஈத்தாமில் வெல்ல முடியும்: ஜோகூர் டிஏபி நம்பிக்கை

ஆயர்  ஈத்தாம்  நாடாளுமன்றத்  தொகுதி  ஒரு   சிரமமான   தொகுதிதான்    என்றாலும்      வெல்ல  முடியாததல்ல   என்கிறார்கள்  ஜோகூர்  டிஏபி   தலைவர்கள்.

கடந்த  பொதுத்   தேர்தலில்   ஆயர்   ஈத்தாமில்   மலாய்க்காரர்கள்   வாக்கில்   21  விழுக்காடுத்தான்    எதிரணிக்குக்  கிடைத்தது.  அண்டை   தொகுதிகளில்   எதிரணி  வேட்பாளர்களுக்குக் கிடைத்த    ஆதரவுடன்  ஒப்பிடும்போது    அது  குறைவான   எண்ணிக்கையாகும்   என்று   ஜோகூர்   டிஏபி   உதவித்    தலைவர்  தியோ  நை  சிங்   கூறினார்.

“இப்போது  ஆயர்  ஈத்தாமில்   மலாய்,  சீன   வாக்காளர்களின்   ஆதரவைப்  பெற   வாய்ப்பு   இருக்கிறது.

“நடப்புப்  பொருளாதார,  அரசியல்   சூழலில்   ஹரபானுக்கு   அதிக   ஆதரவு  கிடைக்க   வாய்ப்பு   உள்ளது”,  என்று  தியோ   ஓர்   அறிக்கையில்   கூறினார்.

ஆயர்   ஈத்தாம்  மலாய்க்காரர்களைப்  பெரும்பான்மையாகக்   கொண்ட   ஒரு   நாடாளுமன்றத்   தொகுதி.  அதை  வைத்திருப்பவர்  மசீச   உதவித்    தலைவர்   வீ  கா  சியோங்.  மூன்று   தவணைகளாக   அவர்   அத்தொகுதியை   வைத்துக்  கொண்டிருக்கிறார்.

2004-இலிருந்து  வீ-இன்  ஆதரவு   குறைந்து  கொண்டே   வருகிறது.  கடந்த   பொதுத்   தேர்தலில்  அவரால்  51.3 விழுக்காடு  வாக்குகளைத்தான்   பெற  முடிந்தது.

ஹரபான்  அத்தொகுதியை  அமனாவுக்கு   ஒதுக்கியுள்ளது.  அமனா    டிஏபி   சின்னத்தில்   அங்கு   போட்டியிடும்.