ஓராண்டுக்கு மேலாக கூட்டரசு நீதிமன்றத்தில் உள்ள பாலர் பள்ளி ஆசிரியர் இந்திரா காந்திக்கும் அவரின் முன்னாள் கணவர் கே. பத்மநாதன் @ முகமட் ரிடுவான் அப்துல்லாவுக்குமிடையிலான வழக்கில் ஜனவரி 29-இல் தீர்ப்பு வழங்கப்படும்.
அது தொடர்பான கடிதமொன்று கூட்டரசு நீதிமன்றத்திலிருந்து தம் கட்சிக்காரர் இந்திரா காந்திக்கு வந்திருப்பதை அவரின் வழக்குரைஞர் ஈப்போ பாராட் எம்பி எம். குலசேகரன் உறுதிப்படுத்தினார்.
“ஆம், ஜனவரி 29-இல் தீர்ப்பு வ்ழங்கப்படும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நாட்டில் பரவலான கவனத்தை ஈர்த்த வழக்கு இந்திரா காந்தி வழக்கு. மதமாறிய அவரின் கணவர் தாயாரின் சம்மதமின்றியே மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மதமாற்றி விட்டு 2009-இல் கடைசிக் குழந்தை பிரசன்னா திக்ஷாவைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார்.
அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீசுக்குக் கட்டளை பிறப்பித்தது. ஆனால், ரிடுவானும் பிரசன்னாவும் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை.
2016-இல் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.