கடந்த ஆண்டு தடுப்புக் காவல் கைதி எஸ்.பாலமுருகன் இறந்து போன விவகாரத்தில் போலீசார் ஒழுங்கு விதிகளை மீறியும் அதிகாரத்தை மீறியும் நடந்து கொண்டிருப்பது தெரிய வந்திருப்பதாக அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் (இஏஐசி) கூறியது.
“பாலமுருகனைத் தடுத்துவைக்க விரும்பிய போலீசாரின் விண்ணப்பத்தை மெஜிஸ்ட்ரேட் நிராகரித்து அவரை விடுவிக்க உத்தரவிட்டும் போலீசார் அதைச் செய்யாதது நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஒரு கடும்குற்றமாகும்”, என இஏஐசி தலைவர் ஏ.ஆசிஸ் ஏ ரகிம் கூறினார்.
இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அசிஸ், பாலமுருகனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மெஜிஸ்ட்ரேட் பணித்ததையும் அவர்கள் செய்யத் தவறிவிட்டனர் என்றார்.
பாலமுருகனை “நியாயமான காரணமின்றி” மீண்டும் கைது செய்ய உத்தரவிட்ட “எஸ்பி46”, “எஸ்பி28” என்று அடையாளம் கூறப்பட்ட இரு அதிகாரிகளும் “அதிகாரத்தை மீறி நடந்துகொண்டிருப்பது” இஏஐசி-க்குத் தெரிய வந்துள்ளது.
பாலமுருகனை 2017, பிப்ரவரி 6-இல் கைது செய்த போலீசார் அவரை பண்டார் பாரு கிளாங் போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் ஷா ஆலம் லாக்-அப் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சில மணி நேரங்கள் வைத்திருந்த பின்னர் காலையில் கிள்ளான் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டார்.
மெஜிஸ்ட்ரேட் பாலமுருகனை விடுவிக்க உத்தரவிட்டார்.ஆனால், விடுவிக்காமல் அவரை கிள்ளான் போலீஸ் மாவட்ட தலைமையகத்தி தடுத்து வைத்தனர். அவர் பிப்ரவரி 8-இல் அதிகாலையில் இறந்து கிடந்தார்.
அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.