சிலாங்கூரில் தேர்தல் தொகுதி எல்லைகள் சீரமைக்கப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க 100,000 வாக்காளர்களைத் திரட்ட பெர்சே விரும்புகிறது.
தேர்தல் ஆணையம் இப்போது இரண்டாவது தடவையாக புதிய தேர்தல் தொகுதிகளுக்கான அதன் பரிந்துரைகளை பிப்ரவரி 14வரை காட்சிக்கு வைத்துள்ளது. அதற்கு ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் அந்தத் தேதிக்குள் ஆட்சேபனையைத் தெரிவித்தாக வேண்டும்.
இற்றைப்படுத்தப்பட்டிருக்கும் பரிந்துரைகள் முன்போல் அவ்வளவு சர்ச்சைக்குரியவையாக இல்லை என்றாலும் ஒரு சாராருக்குச் சாதகமான முறையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருப்பதையும் தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கையில் நிலவும் ஏற்ற தாழ்வுகளையும் சரிசெய்ய வேண்டியுள்ளது என பெர்சே கூறியது.
100பேரைக் கொண்ட குழுக்களால்தான் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும். ஆட்சேபனை தெரிவிப்போரை ஒருங்கிணைக்கும் பணியை பெர்சே செய்யும்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் மாநில முழுவதும் நிறுவப்பட்டுள்ள ஆட்சேபனை தெரிவிக்கும் மையங்களில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று பெயரைப் பதிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி 14க்குப் பிறகு இசி ஆட்சேபனை தெரிவிப்போரின் கருத்துகளைக் கேட்க பொது விசாரணையை நடத்தும்.
இசி சிலாங்கூரில் மட்டும்தான் இன்னும் பொது விசாரணையை நடத்தாதிருக்கிறது.
தேர்தல் எல்லைகள் திருத்தப்பட்டது குறித்துக் கருத்துரைத்த விமர்சகர்கள், இசி மலாய்க்கார்கள், சீனர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்கள். இது ஆளும்கட்சிக்குதான் நன்மையாக முடியும் என்றும் குறிப்பிட்டனர்.