தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை மாற்றிக்கொள்ள நினைக்கிறார் பிகேஆர் எம்பி வில்லியம் லியோங்

ஐந்து   மாதங்களுக்குமுன்   பிகேஆர்  அரசியல்  பிரிவிலிருந்து   விலகிய  செலயாங்  எம்பி   வில்லியம்  லியோங்,   14வது   பொதுத்   தேர்தலில்    போட்டியிட  வேண்டாம்  என்றுதான்  நினைத்துக்  கொண்டிருந்தார். ஆனால்  இப்போது     முடிவை  மாற்றிக்கொண்டிருக்கிறார்.

பலர்   14வது   பொதுத்   தேர்தலில்    அவருடைய    தொகுதியைத்    தற்காத்துக்கொள்ள    வேண்டுமென  அவரைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.

“பல  என்ஜிஓ-கள்,  மக்கள்,  பிஎன்  தரப்பிலிருந்துகூட-    யாரென்று  சொல்ல  மாட்டேன் –  முடிவை   மாற்றிக்கொள்ளும்படி   கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

“பணியைத்   தொடங்கி   விட்டோம்,  அதை  முடிப்போம்  என்றனர். அதனால்  முடிவை  மறுபரிசீலனை   செய்வேன்”,  என்றவர்  மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

நாட்டைப்  பாதுகாப்பதும்  சீர்திருத்தங்களைச்   செயல்படுத்துவதும்தான்   அந்தப்  பணி   என்றார்.

பிகேஆரில்  சில    தரப்புகள்   பாஸுடன்   பேச்சு   நடத்த  விரும்பியது   பிடிக்காமல்  லியோங்   கட்சியின்  அரசியல்   பிரிவிலிருந்து   விலகியதுடன்  அடுத்த  பொதுத்    தேர்தலில்   போட்டியிட   வேண்டாம்   என்றும்  கடந்த   ஆகஸ்டில்   முடிவெடுத்தார்.

இப்போது  செலாயாங்   பிகேஆர்  உறுப்பினர்கள்   லியோங்கைத்தான்  செலாயாங்கில்   களமிறக்க  வேண்டும்   என்று  கேட்டுக்கொள்ளும்  மகஜர்  ஒன்றை  கட்சித்   தலைவர்   டாக்டர்  வான்  அசிசா   வான்  இஸ்மாயிலிடம்   கொடுத்துள்ள   வேளையில்  லியோங்   முடிவை  மாற்றிக்கொள்ளப்போவதாகக்  கூறியுள்ளார்.