எதிர்வரும் பொதுத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மட்டுமின்றி நாட்டுக்கே மிக முக்கியமானது. நாடு சுதந்திரத்திற்குப் பின், 60 ஆண்டுகளில் மிகச் சிக்கலான ஒரு காலக்கட்டத்தில் பயணிக்கிறது என்பதை அனைவரும் அறிவோம், நாட்டு மக்கள் ஒன்றுபட்டு இந்நாடைக் காப்பாற்றாவிடில் இந்நாடே கடனில் மூழ்கும், நமது மக்கள் அவர்களின் சுதந்திரத்தை இழப்பார்கள்.
பங்காளதேசக் குடிமக்கள் போல அல்லது பர்மா ரோகிணியா அகதிகள் போல் நமது பிள்ளைகள் அடுத்த நாட்டில் அடைக்கலம் தேட நேரிடும், அப்படிப்பட்ட சூழலிருந்து நாட்டைக் காப்பாற்றவே, கடனிலிருந்து மக்களை மீட்கவே சுயக்கௌரவம், விருப்பு வெறுப்பு, விரோதம், குரோதம் ஆகிய அனைத்தையும் ஒதுக்கித்தள்ளிவிட்டுத் துருவங்களாக இருந்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நாட்டு பிரதமராக இருந்தபொழுது அவரால் ஜ.செ.க, கட்சியின் தலைவர்கள் லிம் கிட்சியாங், லிம் குவான் எங், கல்பால் சிங், பி பட்டு, வி .டேட், மற்றும் பலர் அமானா கட்சியின் தலைவர் மாட் சாபூ, மற்றும் பல உச்சமன்ற உறுப்பினர்களும் சிறையில் அடைக்கப்பட்டதை நாடே அறியும்!
ஆனால் அந்தக் கொடுமைகளை மறந்து துன் மகாதீரை புதிய கூட்டணிக்குத் தலைமையேற்கவும், அவரின் ஆறுமாத கட்சிக்கு அதிமுக்கியம் அளித்து, 14வது பொதுத் தேர்தலில் தீபகற்ப மலேசியாவில் அதிக இடங்களை அக்கட்சிக்கு ஒதுக்கவும் கெஅடிலான், ஜ.செ.க மற்றும் அமானா தலைவர்கள் இசைந்துள்ளது சாதாரண முடிவல்ல என்பதனை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
இவ்வேளையில், ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்து, பொய்யாக ஜோடிக்கப்பட்டக் குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார், அதனால், அவரின் குடும்பத்தினர் சந்தித்த அவமானங்கள், அவமரியாதைகளையும், அம்னோவின் துணைத் தலைவராகவும் நாட்டின் துணைப் பிரதமராகவும் இருந்து தன் பதவியைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறிய மொஹிடின் யாசின் போன்றோர்களின் தியாகங்களை நாடு சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நாட்டு மக்களின் வெற்றிக்கு, இந்நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற அன்வார் இப்ராஹிம் தனது பங்களிப்பை வழங்க முடியாமல், சிறையிலிருப்பதால் முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், இப்போராட்டத்தை முன்னெடுக்க பெரும் துணையாக இருப்பார் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது என்கிறார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
அதனால், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பிரதமர் பொறுப்புக்கு முன் மொழிந்துள்ளதுடன், துணைப் பிரதமர் வேட்பாளராகக் கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசாவையும் முன்மொழிந்துள்ளது.
இதன்வழி பக்காத்தானின் பிரதமர், துணைப்பிரதமர் வேட்பாளர்கள் குறித்து நீண்ட நாள்களாகப் பாரிசான் மேற்கொண்டு வந்த விஷமப் பிரச்சாரங்களுக்குப் பக்காத்தான் ஹராப்பான் சரியான பதிலடி கொடுத்து விட்டது.
அது மட்டுமின்றிப் பக்காத்தான் ஹராப்பானின் பங்காளிக் கட்சிகளான பாட்டி பிரி பூமிக்கு 52, கெஅடிலானுக்கு 51, ஜ.செ.கவுக்கு 35, அமானவுக்கு 27 எனப் போட்டி இடும் நாடாளுமன்ற இடங்களைத் தீபகற்ப மலேசியாவில் பிரித்துள்ளதும் ஒரு வியூகமே என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
இது, மலாய்க்காரர்களிடம் பாரிசான் விதைத்திருந்த இரண்டு நச்சு விதைகளைப் முளையிலேயே அழித்து விட்டன. அதாவது ஜ.செ.காவின் லிம் கிட் சியாங் அடுத்த துணைப் பிரதமர் என்றும் பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கம் மற்ற இனத்தின், குறிப்பாக ஜ.செ.கயின் கைப்பாவையாகச் செயல்படும். ஜ.செ.க மலாய்க்காரர்கள் உரிமையை நசுக்கும் என்ற பயமுறுத்தலுக்கும் முடிவு கட்டப்பட்டுவிட்டது.
காரணம், மகாதீர் எப்படிப்பட்டவர், எவருடை கைப்பாவையாகவும் அவர் செயல்படமாட்டார் என்பதை மலாய்க்காரர்கள் நன்கு அறிவர். அதே வேளையில் தீபகற்ப மலேசியாவில் வெறும் 35 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிடும் ஜ.செ.க தனித்து அரசாங்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதுடன், முன்பு அம்னோ கொண்டிருந்த தனி ஆதிக்கப் பெரும்பான்மை இடம் இப்பொழுது எந்தக் கட்சிக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இல்லை.
ஆகையால், அரசாங்க முடிவுகள் எந்த ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிலும் இருக்காது, அதனால் ஜனநாயகம் மேலும் செழித்து ஓங்கும் என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவரும், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
கடந்த 60 ஆண்டுகளாகப் பாரிசான் வாயளவில் மட்டுமே பெண்ணுரிமையைப் பேசி வந்தது. ஆனால் பெண்களுக்கு ஆக்ககரமான அங்கீகாரத்தை வழங்கியதில்லை, ஆனால் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசாவை துணைப் பிரதமராகப் பக்காத்தான் ஹராப்பான் முன்மொழிந்து, இந்நாட்டுப் பெண்களுக்கே புதிய அங்கீகாரத்தைப் பக்காத்தான் வழங்கிவிட்டது.
மலேசியாவை பல்லில்லா புலியாக்கி விட்டார் நஜிப்!
நாட்டின் சுதந்திரத்தின் போது, ஆசிய வட்டாரத்தில் இளம் பொருளாதாரப் புலியென வர்ணிக்கப்பட்ட தென் கொரியா, தைவான், ஹாங்காங்குடன் இருந்த மலாயா, இன்று உலகின் முக்கிய பெட்ரோலியம் உற்பத்தி நாடாக இருந்தும், ஜி.எஸ்.டி வரி இன்றி அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது எனப் பிரதமர் நஜிப் துன் ராசாக்கே கூறுகிறார்.
காரணம், ஆட்சியிலுள்ளவர்களால் நாடு அளவுக்குமீறி கொள்ளை அடிக்கப்படுகிறது. மக்களின் கண்களில் எவர் மண்ணை தூவுகிறாரோ, முக்கியப் புள்ளிகளின் கொள்ளையைச் சிறப்பாக மூடிமறைக்கிறாரோ அவருக்கு பதவி. அப்பொழுதுதான் குருடர்களின் ராஜியத்தில் ஒற்றைக்கண்ன் ராஜாவாக இருக்க முடியும்.
அதனால், அப்படிப்பட்டவர்களை பெல்டா, மாரா, தபோங் ஹஜி, போலீஸ் படை, சட்டத்துறைத் தலைவர்களாக, மத்திய வங்கியின் பொறுப்பாளர் என்றெல்லாம் பதவி வழங்குகிறார் நஜிப். இதை நாடு தாங்குமா? என்று கேட்கிறார் ஸ்ரீஅண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர்.
”மலேசியா போலே” என்ற சுலோகம் மக்களை வீறுகொண்டு எழ எழுப்பப்பட்டது, இன்று உலகமே நம்மைப் பார்த்து “மலேசியாவால் மட்டுமே போலே” என்று கேவலமாகக் கூவும் அளவுக்கு உலக மகா ஊழல்களைப் படைத்து வருகிறது நஜிப்பின் பாரிசான் அரசாங்கம்.
பிள்ளைகளின் எதிர்காலத்தை முடவர்களிடம் ஒப்படைக்காதீர்
இப்படிப்பட்ட ஊழலால் பல்லாயிரங்கோடி கடன்களுக்கு வட்டி கட்ட முடியாத பாரிசான் அரசாங்கம் கட்டம் கட்டமாக நாட்டை விற்கத் தொடங்கி விட்டது. நாட்டின் மின் உற்பத்தி தொடங்கி, ரயில் போக்குவரத்து, துறைமுகம் மட்டுமின்றி மலேசியத் தலைநகரான கோலாலம்பூரின் ஒரு பகுதியையும் அன்னியர்களுக்கு விற்றுவிட்டது நஜிப்பின் பாரிசான் அரசு. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த அமைச்சரவையையே அன்னியர்களுக்கு விற்று விடுவார் இன்றையப் பிரதமர் நஜிப்.
இப்படிப்பட்ட பகற்கொள்ளையர்களை தடுத்து நிறுத்தாவிடில், இந் நாட்டு மக்களான நாம் பெரும் சுமைகளைச் சுமக்க வேண்டி வரும். உலகமயத்திற்கு ஏற்ப எல்லாத் துறைகளிலும் போட்டியிடும் ஆற்றலுடன் வளர வேண்டிய நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை அறிவு, ஆற்றல் அற்ற முடவர்கள் கைகளில் ஒப்படைத்த ஒரு மாபெரும் குற்றத்தைப் புரிந்தவர்களாவோம் நாம்.
கடும் சீரழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மீண்டும் மலேசிய மக்கள் கைகளில் ஒப்படைக்கப் படவுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு உடனடியாக நாட்டில் அரசியல் மாற்றம் கொண்டுவர நாம் தவறினால், அதன் பின்விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் ஏற்படுத்தும் மாற்றத்தினால் மக்களுக்குப் பல அனுகூலங்களை வழங்க பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சித்தமாகவுள்ளது,
பக்கத்தான் ஹரப்பான் மேற்கொள்ளவிருக்கும் அதிமுக்கிய நடவடிக்கைகளில் முன்னிலையில் இருப்பது ஜி.எஸ்டி வரியை ஒழிப்பது மற்றும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்குவது ஆகும்.
மேலும், கீழ்க்கண்டவற்றிலும் பெரும் சீர்திருத்தம் செய்யப்படும்:
- நீதித்துறை சீரமைப்பு, முக்கியமாக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான சீரமைப்பு.
- இனிவரும் காலங்களில் சட்டத்துறை தலைவரை நாடாளுமன்றம் தேர்வு செய்வது.
- போலீஸ் தலைமை இன்ஸ்பெக்டரையும் நாடாளுமன்றம் தேர்வு செய்வது.
- வாக்காளர் தகுதியை இளைஞர்களுக்கு 18 வயதிலேயே வழங்குவது.
- ஊழல் தடுப்பு வாரியத்தை பிரதமர்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்பது.
- தேச நிர்மாணிப்பிலும், ஊழலை அம்பலப்படுத்துவதிலும் பத்திரிக்கைகளின் பங்களிப்பை மேம்படுத்துவது.
இது போன்ற பல முக்கிய சீரமைப்புகளை பக்கத்தான் ஹரப்பான் மிக உறுதியுடன் மேற்கொள்ளும் என்றார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.