எதிர்க்கட்சிகளில் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று கூறியதாகக் கூறப்படும் கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட்மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என பெர்சே வலியுறுத்தியது.
“எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் அரசு அதிகாரிகளை வெளிப்படையாக மிரட்டும் மகாட்சிரின் செயலை பெர்சே கண்டிக்கிறது.
“ இசி இவ்விவகாரம்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சுதந்திரமாக வாக்களிக்கவும் வாக்களிப்பை இரகசியமாக வைத்துக்கொள்ளவும் குடிமக்களுக்குள்ள உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என பெர்சே கேட்டுக்கொள்கிறது”, என பெர்சேயின் அறிக்கை ஒன்று இன்று தெரிவித்தது.
நேற்று சீன நாளேடு ஒன்று, எதிர்க்கட்சிகளில் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் கூறியதாக அறிவித்திருந்தது.
ஆனால், பெர்னாமா செய்தி வேறுவிதமாகக் கூறியிருந்தது. அரசு ஊழியர்கள் வேலையையும் அரசியல் சித்தாந்தங்களையும் தனித்தனியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாட்சிர் குறிப்பிட்டதாக அது தெரிவித்தது.
அரசு அதிகாரிகள் எதிர்க்கட்சிகளில் சேர்வதைத் தடுக்கும் மகாட்சிரின் பேச்சு அவரது “அதிகாரத்தை மீறிய” பேச்சு என்று பெர்சே சாடியது.
“அரசு ஊழியர்கள் ஆளும் கட்சியின் சொத்துகள் அல்ல”, என்று அது கூறியது.
அரசு ஊழியர்கள் தாராளமாக ஆளும் கட்சியில் சேரலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அமைச்சருக்கு அரசாங்கத்துக்கும் அரசியல் கட்சிக்குமுள்ள வேறுபாடு தெரியவில்லை என்றும் அது சொன்னது.