ஞாயிறு நக்கீரன், ஜனவரி 22, 2018. உலகத்தின் கவனம் மீண்டும் ஒரு முறை பத்துமலையின் திசை நோக்கி திரும்பி உள்ளது. ஆன்மிக அடிப்படையிலும் சுற்றுப் பயணிகள் என்ற அளவிலும் ஆவணப் படங்களைத் தயாரிப்போர் என்ற வகையிலும் இன்னும் பல கூறுகளாலும் இலட்சக் கணக்கான மக்கள் உலகில் பல்முனைகளில் இருந்தும் பத்துமலைக்கு படையெடுப்பது ஆண்டாண்டு காலமாக நடைபெறுகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு மீண்டும் ஒரு படையெடுப்பு பத்துமலை திருத்தலத்தை நோக்கி இம்மாத நிறைவையும் வரும் மாத தொடக்கத்தையும் உட்படுத்திய காலத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக சலசலப்புடன் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் இயற்கை நிகழ்வான சந்திர கிரகணம். இதையொட்டியும் வெட்டியும் எழுந்துள்ள சூடான கருத்தாடல்தான் இந்த கதகதப்புமிகு சலசலப்புக்குக் காரணம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஏறக்குறைய அதன் மையப் பகுதியில் இந்திய துணைக் கண்டத்தில் அக்காலத்தே வாழ்ந்த கிறிஸ்துவர்களையும் இசுலாமியர்களையும் தவிர்த்து ஏனைய அனைத்து மதங்களின் மக்களையும் வகைப்படுத்தவும் கணக்கிடவும் பெரும் அல்லல்பட்ட ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்தியம் ஆகிய ஆறு சமயக் கொள்கைகளை உட்படுத்திய இந்து சமயம் என்னும் கட்டமைப்பு பெரும் உதவியாக அமைந்தது.
ஆரியர்கள் தங்களின் வாழ்க்கைக்கான அடித்தளம் கொஞ்சமும் சரிந்துவிடாதபடி பரிகாரம்-சொர்க்கம்-நகரம் ஆகிய முக்கூறுகளையும் உட்படுத்தி உருவாக்கிய இந்து சமயத்தைப் பற்றி, இங்கிலாந்து மகாராணி பெரும் மகிழ்ச்சி தெரிவித்தாராம். குறிப்பாக இதன் தொடர்பில் பெரும்பங்காற்றியவரும் விநாயக சதுர்த்தியை பேரளவில் அறிமுகப் படுத்தியவருமான மராட்டிய சித்பவன பார்ப்பனர் பாலகங்காதர திலகர் குறித்து தனிப்பட்ட முறையில் மனம் நெகிழ்ந்தாராம் அந்நாளைய பேரரசி விக்டோரியா மகாராணி.
அவர், இந்தியாவை நிர்வகித்த அவரின் பிரதிநிதிகள் உட்பட ஆங்கில ஆட்சியாளர்கள் எவரும் பௌத்தம், சமணம் உள்ளிட்ட பிற மதங்களைப் பற்றி பொருட்படுத்தவில்லை.
அப்படிப்பட்ட இந்து சமயத்தில் கௌமாரம் என்னும் கொள்கையின் வழிபாட்டுத் தலைவனான திருமுருகனுக்காக கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசம் உன்னதமானது; பிரபலமானது.
தை மாதத்தில் முழு நிலவு நாளில் பூச நட்சத்திரம் கூடிவரும் வேளையில் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதுதான் தைப்பூச விழாவின் அடிப்படை. அதில், முருகனின் தலைமைப் பக்தன் இடும்பனின் அடியொற்றி, நைவேற்றியப் பொருட்களை காவடியில் வைத்து அல்லது தலையில் சுமந்து வந்து திருமுருக திருக்கடவுளின் சன்னிதானத்தில் அபிஷேகம் செய்து ஆராதிக்கும்போதில் பக்தர்களின் உள்ளத்தில் பொங்கும் இன்பத்திற்கும் மன நிறைவிற்கும் எல்லையில்லை.
ஆனாலும், பால்-பருவம்-வண்ணம்-வடிவம்- அருவம்-உருவம்-ஊண்-உயிர்-இளமை- முதுமை-இன்பம்-துன்பம் உள்ளிட்ட எந்தக் கூற்றுக்குள்ளும் வகைப்படுத்த முடியாத ஆனால், பேராற்றல்மிக்க பரம்பொருளை வணங்கவும் தொழுதொழுகவும் ஓர் அடையாளமாக தோற்றுவிக்கப்பட்டதுதான் இறை உருவங்களும் அதன் பெயரில் நாம் மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளும்.
இதை யெல்லாம் தெரிந்து கொண்டால், தெளிந்தறிந்து கொண்டால் பெரிய கத்தியை தோளில் சுமப்பது, சுருட்டு புகைப்பது, சாட்டையால் சொடுக்குவது, நாக்கில் அலகு குத்துவது, கத்திமேல் ஏறி நிற்பது போன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து அன்பும் அருளும் மிளிரும் வண்ணம் அமைதியான முறையில் வழிபட்டு தைப்பூச நந்நாளில் பத்துமலை திருத்தலத்தில் குடிகொண்டுள்ள திருமுருகக் கடவுளின் திருப்பாதம் பணிவோம்.
ஆனால், உண்மை நிலையென்ன வெனில், மேலேக் குறிப்பிட்ட அத்தனை அக்கப்போரும் தைப்பூச சமயத்தில் நடந்த வண்ணமாகத்தான் இருக்கின்றன ஆண்டுதோறும்; இது குறித்து சமய சான்றோர்களும் சமய-சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்பும் பொழுதெல்லாம், கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்; தோட்டப் புறங்களில் வாழ்ந்தவர்களின் மனநிலையை ஒன்றும் செய்ய முடியாது என்றெல்லாம் சொல்லி அல்லது அறிக்கை விட்டு மறுதலிக்கப்படும்.
ஒவ்வொரு மனிதருக்கும் இயற்கையாக ஒவ்வொரு குணம் இருந்தாலும், அவர்கள் புரியும் பணியால் இன்னொரு குணம் இயல்பாக தொற்றிக் கொள்ளும். குறிப்பாக, போலீஸ்காரர் என்றால் கண்ணில்படும் அனைவரையும் சந்தேகிப்பது, மாணவர் என்றால் ஆசிரியரிடம் எதையும் மறைப்பது, சுவை பானம் விற்பவர் அல்லது சாலையோரக் கடைக்காரர் என்றால் மழையை வெறுப்பது என்று, தாங்கள் பார்க்கும் வேலையைப் பொறுத்து ஒவ்வொரு குணம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
அந்த வகையில் தேவஸ்தான தலைவர் என்றால் கூட்டம் கூடினால் போதும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லைதான்; அதேவேளை, எப்படிப்பட்டக் கூட்டம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?
இப்படிப்பட்ட நிலையில்தான் இவ்வாண்டு தைப்பூச நாளில் சந்திர கிரகணமும் வருகிறது. அதனால், சந்திர கிரகணம் இடம்பெறும் குறிப்பிட்ட நேரத்தில் ஆலய வழிபாட்டை நிறுத்தி வைக்க வேண்டும்; அதற்கேற்ப ஆலயங்களில் நடை சாற்றப்பட வேண்டும் என்று ஓர் அன்பர் அறிக்கை விட, உடனே தேவஸ்தானத்தின் சார்பில் இலட்சக் கணக்கான பக்தர்கள் திரளும் உச்ச நேரத்தில் அப்படியெல்லாம் நடை மூட முடியாது; ஆனால், சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் முன்னும் முடிந்த பின்னும் பரிகார பூசை நடத்தப்படும் என்றும் செய்தியாளர்க் கூட்டத்தை நடத்தி அதன்வாயிலாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், இதன் தொடர்பில் மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் மறுப்பும் மறுதலிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இளைஞர்-விளையாட்டுத் துறை துணை அமைச்சர் தேவஸ்தானத்தின் பக்கம் நின்று குரல் பதிவாக ஒரு செய்தியை சமூக ஊடகங்களின்வழி உலாவ விட்டார்.
அவரின் கருத்தில் நியாயம் இருந்தாலும், வெளிப்படுத்திய விதம், கரடு முரடாகவும் காரசாரமாகவும் இருக்கவே, இந்தச் சிக்கல் மேலும் சிக்கலாகி வருகிறது.
உண்மையில் நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படாமல் பூமி மறைத்துவிடுவதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இந்த இருள்சூழ் நிலைதான் சந்திர கிரகணம் ஆகும். இது சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும். இதனால் முழு நிலவு நாளில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.
நம் சூரிய குடும்பத்தின் தாய்வீடான வானவீதியில் குறிப்பாக பால்வெளி மண்டலத்தில் இயற்கையாக நிகழும் சந்திர கிரகணத்தால், நிலவுகில் வாழும் மனிதர்களுக்கு ஏதும் பாதிப்பு நிகழுமா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை ஆயினும், அந்த நேரத்தில் சில கட்டுப்பாடுகளை சமயம் விதிக்கிறது. குறிப்பாக, குறிப்பிட்ட அந்த நேரத்தில் ஆலயம் திறந்திருக்ககூடாது; பொதுமக்கள் நடமாட்டம் கூடாதென்றெல்லாம் இந்து சமயம் சொல்கிறது. அதேவேளை, சென்னை மயிலையில் அமைந்துள்ள பார்த்தசாரதி ஆலயம், வைணவ திருத்தலமான திருச்சி திருவரங்க பேராலயம், சிதம்பரம் நடராசர் திருவாலயம் போன்ற திருத்தலங்கள் எல்லாம் எந்த நேரமும் திறந்துதான் இருக்கின்றன. இதையும் மலேசிய இந்து சங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பழங்காலத்தில், கிரகணம் என்றால் என்னவென அறியப்படாதபோது அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். மேலை உலகின் நாகரிகத் தொட்டில் என்று போற்றப்பட்ட கிரேக்க மண்ணில்கூட, சூழ்ச்சிக்காரர்களும் சூனியக்காரர்களும் கூட்டு சேர்ந்து ‘எங்களின் அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுகிறோம். அதனால்தான் வானம் இப்படி இருள் சூழ்ந்துவிட்டது’ என்றெல்லாம் கதை அளந்தனர். முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று மக்களும் நம்பினர்.
இருந்தபோதும், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அக்கப்போரான சம்பவங்கள் இவை; இப்பொழுது, இத்துணை ஆன்மிக சான்றோர்களும் ஆன்மிக நூல்களும் தோன்றிய பின்னும், அறிவியல் ஏகமாக வளர்ந்த நிலையிலும் சந்திர கிரகணம் தொடர்பான சர்ச்சை தொடர்வது விந்தைதான்.
நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா? நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா அல்லது நான் சொல்வதை நீ கேட்க வேண்டுமா? இப்படியெல்லாம் ஒருவருக்கொருவர் ஆணவச்செருக்குடன் நடந்து கொள்வதால் சமய அரசியல் அதி வேகமாக மலேசியாவில் வளருகின்றது.
ஞாயிறு நக்கீரனின் ஆய்வு வரவேற்கத்தக்கது.
கிரகண நேரத்தில் சந்திர ஈர்ப்புச் சத்தி வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும். இத்தகைய நேரத்தில் சிந்தனையை ஒரு நிலைப்படுத்துவது சிரமம். இதற்கு அறிவியல் ரீதியாக ஒன்றை சொல்லலாம். நமது மூளைப்பகுதியில் திரவப்பொருள் உள்ளதால் அத்தகைய சத்தி வாய்ந்த ஈர்ப்புச்சத்தி நேரத்தில் நமது மூளையின் முழு செயல்பாடு தடைபட வாய்ப்புள்ளது. அதனால் அந்நேரத்தில் அதிகமான நீர் அருந்துவதையும் தவிர்க்க வேண்டுமென்பது.
இது நாம் முற்றிலும் திறந்த வெளியில் இருந்தால் அவ்வாறு நடக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடக்குமென்பதால்தான் நம் முன்னோர் கர்ப்பிணிப் பெண்களை வெளியே செல்ல வேண்டாமென்றும் ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களைக் கொண்டு வேலை செய்யலாகதென்றும் அறிவுறுத்தினர். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவ்வேளையில் வெளியே செல்லும்போது அதிகமான ‘ultravoilet’ கதிர் வீச்சுக்கு இலக்காகலாம். அதனால்தான் இத்தகைய தடைகளையெல்லாம் அக்காலத்தில் விதித்தனர்.
வெறுமனே செய்யாதீர்கள் என்று அறிவுரை சொன்னால் கேட்பார்களா? பயமுறுத்தல் இல்லாமல் எவரும் கேட்கமாட்டார்கள். அதனால்தான் அசம்பாவிதங்கள் நடக்குமென்றும், அது தெய்வ குற்றமென்றும் கூறி பயமுறுத்தி வைத்தனர். அத்தகைய பயமுறுத்தலை மக்களும் நம்பி அதன்படி நடந்தனர்.
இப்பொழுதோ இதற்கு இராகு கேது செயற்பாட்டால் பல அசம்பாவிதங்கள் நடக்குமென்று கதை கட்டி விட்டு என்னவென்னவோ காரணங்களைச் சொல்லுகின்றனர். இதற்கு ஒரு சிவாச்சாரியாரும் முருக பக்தர்களும் துணை போவது வருந்தத்தக்கது. ‘யாமிருக்க பயமேன்’ என்று கூறிய முருகனை நம்பாது இத்தகைய காவி உடை அணிந்தவர் பின்னால் போனால் முருகனும் நம்மைக் காப்பாற்ற மாட்டர் காரணம் முருகன் நம்மை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை நமக்கு இல்லையே.
மேலும் பத்துமலையின் குகையில் இருக்கும் முருகதலம் ஆகம விதிக்கு உட்பட்டு கட்டப்பட்ட கோயில் இல்லை. அதனால் ஆகம சோதிட விதிகளையெல்லாம் காட்டி பயமுறுத்துவதை நிறுத்தவும். சிவசிவ.
இந்த ஆண்டு தைப்பூசத்தை ஒட்டி பெரும்பாலான மலேசிய இந்துக்கள் குழப்பத்தில் இருக்கும் இவ்வேளையில் இந்த கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார்? கோயில் திறந்திருக்கலாமா? கூடாதா? அப்படியே கோயில் திறந்திருந்தாலும் அவ்வேளையில் பக்தர்களும் மக்களும் வெளியே நடமாடுவது நல்லதா? என்பதை விளக்காமல்….குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளாது குருட்டுக் குருவினைக் கொண்டு குருடும் குருடும் கூடி குருட்டாட்டமாடி குருட்டில் விழுந்த கதையாக இருக்கிறது..இனியாவது சொல்ல வருவதை சுருங்க விளக்கமாகச் சொல்லவும். உலகநாயகன் ‘மாரி’ உலக மக்களுக்கு புரியா வகையில் சொல்ல வேண்டாம்.
தேனி, அவர்கள் பல நல்ல கருதுக்களை முன் வைத்து சொல்லி இருப்பது வரவேற்கிறேன். இருப்பினும் ஒரு சில வேதனைகளும் இருப்பதை நாம் கவனிக்கவும் வேண்டும். பத்துமலை தேவஸ்தானம் நிர்வாகதினர் பல வருடங்களா அவர்களே இருந்து வருகின்றனர். இதன் தலைவர் பல வருடங்கள் தலைவராக இருக்கிறார். இதன் உள் நோக்கம்தான் என்ன. ஒன்றும் புரியவில்லை. வருடம் தோறும் மக்கள் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்கு லட்சம்பேர் கூடுகின்றனர். இப்படி இருக்க நாம் இனியும் மௌனமாக இருப்பது நல்லது அல்ல. இந்த பத்துமலை தேவஸ்தானம் நிர்வாகத்தை அடியோடு மற்ற வேண்டும். முறையாக தேர்தல் வரவேண்டும். இந்த பத்துமலை தேவஸ்தானம் நிர்வாக பொறுப்பை அரசாங்த்திடம் ஒப்படைக்காமல் பொதுவில் மக்களிடம் ஒப்படைத்து முறையாக தேர்தல் வைத்து மக்களே அதை நிர்வகிக்க வேண்டும். இது எந்த அளவு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. இந்த பத்துமலை தேவஸ்தானம் நிர்வாகத்தை மாற்றுவதற்கு அவசியம் ஒரு அமைதியான முறையில் ஈடுபட வேண்டும்.
பத்துமலை நிர்வாகம் என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினர் அடங்கியது அதுக்குள்ளதான் தேர்வு நடக்கும் வெளியார் மக்கள் கலந்து கொள்ள முடியாது.பத்துமலை முருகனுக்கு தைப்பூச விழா, முருகனுக்கு மாநாடு எல்லாம் சரிதான் ஆனா அந்த இடத்தை வழங்கிய வள்ளல் தம்புசாமி பிள்ளையை மறந்து விட்டனர். அவர் நினைவாக ஒரு கூட்டமாவது செய்வார்களா நடராஜா நிர்வாகம்..
அன்று ஐயா வள்ளல் தம்புசாமி பிள்ளை வாழ்ந்த காலம் வேறு. இன்றைய கால கட்டம் வேறு. நம் நாடு உலக நாடுகளின் வரிசையில் மிக பெரிய மாற்றம் கண்டு உள்ளது. அதற்கு ஏற்ப மக்களும் மிக பெரிய மாற்றம் கண்டு உள்ளனர் மறுக்க முடிய உண்மை. நம் நாடும் பல தேர்தல்கள் கண்டு பல பிரதமர்கள் பார்த்து இருக்கிறோம். பத்துமலை நிர்வாகத்தை எடுத்து கொண்டால் அவர்களுக்குள்ளே ஒரு நிர்வாகத்தை அமைத்து கொண்டு பல வருடங்களாக நாங்களே எல்லாம் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என இன்னால் வரை இருகின்றனர். இதை அடியோடு மாற்ற பட வேண்டும். இங்கு தமிழர்கள் அதிகமாக வாழும் நமது நாட்டில் ஒரு புது நிர்வாகத்தை தேர்வு செய்து அவர்கள் வழி நடத்துலாமே. அது சாத்தியமாகும் நாள் கூடிய சீக்கிரம் வரும். அன்று, அவர் ஐயா வள்ளல் தம்புசாமி பிள்ளை, எந்த நோக்கத்திற்காக அன்றைய காலத்தில் அப்படி ஒரு நிர்வாகத்தை நிறுவினர் என்று தெரிய வில்லை. அல்லது அவருக்கு பிறகு வந்தவர்கள என்று கூட தெரிய வில்லை. கடவுள் முருகன்தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் தேர்வே மகேசன் தேர்வு என்று உள்ளது. மாற்றம் ஒன்றே சிறந்த தேர்வு. மக்கள்லாகிய நாம் கூடிய சீக்கிரம் இந்த பூனைகளுக்கு மணி கட்டுவோம். நாம் நினைத்தாள் அது முடியும் முடியும் முடியும். முறையாக அரசாங்கத்தை அனுகி ஒரு நல்ல முடிவு எடுப்போம்.