222 நாடாளுமன்ற இடங்களில் 9-க்கு மட்டுமே போட்டியிட விரும்பும் மஇகாவால் இந்திய சமூகத்தின் நலன்காக்க எப்படிப் போராட முடியும் என்று பிகேஆர் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.
எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளில் ஏமாந்துவிட வேண்டாம் என்று அறிக்கை விட்டுள்ள மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியத்துக்குப் பதிலடியாக பிகேஆர் இளைஞர் செயல்குழு உறுப்பினர் ஏ.குமரேசன் இவ்வாறு கேட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒன்பது நாடாளுமன்ற இடங்களிலும் 19 சட்டமன்ற இடங்களிலும் மஇகா போட்டியிடும் என்றும் அதன் வேட்பாளர்களில் 60 விழுக்காட்டினர் புது முகங்களாக இருப்பர் என்றும் சுப்ரமணியம் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன.
இவ்வளவு குறைவான பிரதிநிதித்துவத்தை வைத்துக்கொண்டு மஇகா இந்தியர்களின் சமூக- பொருளாதார தகுதியை உயர்த்த எப்படிப் போராடப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் குமரேசன்.
“ஆகக் குறைந்த எண்ணிக்கையில் எம்பிகளை வைத்துக்கொண்டு மக்களவையில் அவர்களால் என்ன செய்ய முடியும்? ஒரு கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட்டு வெல்கிறது என்பதுதான் அதன் அரசியல் செல்வாக்கின் அளவுகோலாகிறது .
“ இந்தியர்களுக்காக போராடும் ஒரே கட்சி மஇகா என்ற நிலை இப்போது இல்லை. பக்கத்தான் ஹராபானில் மஇகாவைவிட அதிகமான இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்”, எனக் குமரேசன் கூறினார்.
நல்ல கேள்வி நண்பரெ.