டாக்டர் மகாதீரோ, நஜிப்போ, இருவரின் ஆட்சி காலத்தின் போதும், கிளாந்தான் மக்களின் நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று பாஸ் கூறியுள்ளது.
“முன்பு மகாதீர் அம்னோவின் தலைவர், இப்போது நஜிப், கொள்கைகள் திட்டங்கள் ஒரே மாதிரியானவைதான்.
நேற்றிரவு, கிளாந்தானில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, “மகாதீர் பிரதமராக இருந்தகாலம் தொட்டு, இன்றுவரை கிளாந்தான் ஒடுக்கப்பட்டே உள்ளது,” என்று அம்மாநிலத்தின் பாஸ் செயலாளர் சே அப்துல்லா மாட் நாவி, கூறினார்.
மகாதிர் மற்றும் நஜிப் பிரதமராக இருந்த காலகட்டத்தில், கிளாந்தான் மாநிலத்தில் என்ன வேறுபாடுகளைக் காணமுடிகிறது என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
கிளாந்தான் மக்களுக்குப் பெட்ரோலியத்திற்கான ராயல்டிகளைப் பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
“கிளாந்தான் மக்களுக்கு ராயல்டி கொடுக்கப்படவில்லை, இங்கு நெடுஞ்சாலை இல்லை, துறைமுகமும் இதுவரை இல்லை.
“உண்மையில் இவையெல்லாம் கிளாந்தான் மக்களின் உரிமை. மகாதீர் காலமோ, நஜிப் காலமோ, கிளாந்தானின் நிலை ஒன்றேதான்,” என்றார் அவர்.