எம்ஏசிசி தலைவர் சுல்கிப்ளி அஹமட் மணமான பெண்ணுடன் உறவு வைத்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம் மீதான விசாரணை எந்த அளவில் உள்ளது என எதிரணி எம்பி ஒருவர் போலீசை வினவுகிறார்.
அவ்விவகாரம் தொடர்பில் போலீஸ் நீண்ட காலமாக மெளனம் சாதிப்பதாக டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
“எல்லாம் மெளனமாக இருப்பதுபோல் தெரிகிறது. ஏன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
“போலீஸ் ஜாலான் செமராக் நிலம் தொடர்பான ஒரு ‘பெரிய, சிக்கலான’ விவகாரத்தில் விசாரணைகளை விரைவாக முடிக்க முடிந்தது என்கிறபோது காணொளிக் காட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மட்டும் தாமதம் செய்வது ஏன்”, என பூச்சோங் எம்பி ஓர் அறிக்கையில் வினவினார்.
ஆகக் கடைசியாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூசி ஹருன், 2017 டிசம்பர் 6-இல் அது பற்றிப் பேசியபோது ஒரு வாரத்தில் போலீஸ் விசாரணையை முடித்து விடும் என்றார்.
போலீசார் இரண்டு தடவை விசாரணை அறிக்கைகளை ஏஜிசி அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். ஆனால், இரண்டு தடவையும் அவை நிராகரிக்கப்பட்டன. மீண்டும் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக பூசி தெரிவித்தார்.