மாய்ம் : கூடுதலாக 34 சீனப் பள்ளிகளைக் கேட்கும் டொங் ஜோங் நன்றி இல்லாதது

சீனப் பள்ளிகளின் அறவாரியமான டொங் ஜோங், நாடு முழுவதிலும், கூடுதலாக 34 சீன வகை பள்ளிகளை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதை, மலேசிய ஆமால் இஸ்லாமி அமைப்பு (மாய்ம்) சாடியுள்ளது.

மாய்ம் அமைப்பின், கிளாஸ்தர் கல்வி தலைவர், டாக்டர் அமினி அமீர் அப்துல்லா, ‘இடம் கொடுத்தால் மடத்தைக் கேட்கிறார்கள்’ என டொங் ஜோங்கின் கோரிக்கையைக் கண்டித்துள்ளார்.

அரசாங்கம் கூடுதலாக 10 சீனப்பள்ளிகளைக் கட்டிக்கொடுத்துள்ளது, ஏற்கனவே இருக்கும் 6 பள்ளிகளை இடமாற்றம் செய்து கொடுத்துள்ளது, இவற்றுக்கெல்லாம் டொங் ஜோங் நன்றி பாராட்டாமல் நடந்துகொள்வதாக அவர் கூறினார்.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலா?

தற்போது நாட்டிலுள்ள சீனப் பள்ளிகள் பல இன மாணவர்களுக்கு இடமளிக்க போதுமானதாக இருந்தபோதும், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், டொங் ஜோங் இவ்வாறு கோரிக்கை வைப்பது, அரசாங்கத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும் அச்சுறுத்துவதாகவும் தோன்றுகிறது என்றார் அவர்.

“இருப்பதைக் கைவிட்டு, டொங் ஜோங் அவசியமில்லாத ஒன்றை எதிர்பார்க்கிறது. டோங் ஜோங் அரசாங்கத்திற்கு நன்றியுள்ளதாக இருக்கிறதா?

“டோங் ஜோங், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கும் பேரினவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளின் பிரதிநிதியாக இருக்கிறது.

“இந்தக் கோரிக்கை, 14-வது பொதுத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசாங்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக தெரிகிறது,” என்று நேற்று ஓர் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, டொங் ஜோங் அமைப்பின் தலைவர் வின்சன் லாவ், ஓரியண்டல் டெய்லி உடனான ஒரு நேர்காணலில், 4 மாநிலங்களில் 16 சீனப்பள்ளிகளை கட்டியதற்கும் இடமாற்றம் செய்ததற்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்று பேசியிருந்தார்.

சீனப் பள்ளிகள் போதுமானதாக இல்லை – டொங் ஜோங்

இன்னும் பல இடங்களில், சீனப் பள்ளிகள் போதுமானதாக இல்லை, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று வின்சன் லாவ் தெரிவித்திருந்தது தொடர்பில் டாக்டர் அமினி அவ்வாறு கருத்துரைத்தார்.

“இதனால், மாணவர்கள் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது, இப்பிரச்சனையைக் களைவதில் கல்வி அமைச்சு தோல்வி கண்டுள்ளது,” என்று அவர் கூறியிருந்தார்.

அரசாங்கம் மேலும் முறையான சீனப் பள்ளிகளை உருவாக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம், அதுமட்டுமின்றி, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அறிவிப்புகளை வெளியிட்டு, சீனப் பள்ளிகள் கட்டுமானத் திட்டங்களை ஓர் அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் எனவும் லாவ் கூறியிருந்தார்.

“டொங் ஜோங் செய்த ஆய்வில், சீனப் பள்ளிகள் தேவைபடாத சில புதியக் குடியிருப்புப் பகுதிகளில் அவை கட்டப்பட்டுள்ளன. எனவே, மக்கள் தொகை அதிகமுள்ள மற்றும் அதிக எண்ணிக்கையிலான மாணவார்களைக் கொண்ட பள்ளிகளுக்கு அருகில் புதிய சீனப் பள்ளிகள் கட்டப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இனரீதியான செயல்களுக்குச் சீனப் பள்ளிகளே காரணம்

இந்த நாட்டில் இனரீதியான செயல்களுக்கு சீனப் பள்ளிகளேக் காரணம், மேலும், சீனப் பள்ளி மாணவர்களிடையே மலாய் மொழி ஆற்றல் நன்றாக உள்ளது என்று டொங் ஜோங் பொய் கூறுகின்றது என்று அமினி கூறினார்.

“இது தவறான தகவல், அவர்களில் பெரும்பாலானவர்கள் மலாய் மொழியில் சரளமாக பேச முடிவதில்லை, குறைவாகவே தொடர்பு கொள்கின்றனர், சரியாக எழுதவும் முடிவதில்லை.

“மற்ற இனத்தவரோடு தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. இதில் ஒற்றுமையை எப்படி வளர்ப்பது?” என்ற அவர்; சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைவிட, தேசியப் பள்ளிகள் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் சீன மாணவர்கள் பிற இனத்தவருடன் எளிதில் கலந்துவிடுவதாக ஆய்வுகள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

ஒரு புதிய சீனப் பள்ளியை உருவாக்கும் செலவைப் பற்றி கவலை தெரிவித்ததோடு, பூமிபுத்ரா உரிமைகள் பற்றி மத்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதைப் பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போது, நாடு முழுவதிலும் 1,298 சீனப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 883 பள்ளிகள் அரசாங்க முழு மானியம் பெறும் பள்ளிகளாகும்