ஜோகூரை ஹரப்பான் கைப்பற்றுவது சிரமம், கான் கூறுகிறார்

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஜோகூரில் பெருமளவில் வெற்றி பெரும் சாத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்று ஒரு சிறந்த வருங்காலத்திற்கான மையம் (சென்பெட்) என்ற அமைப்பின் கூட்டுத் தலைவர் கான் பிங் சியு கூறுகிறார்.

கான் கூறுவது சரியானதாக இருக்குமானால், 14 ஆவது பொதுத் தேர்தலில் மத்திய அரசைக் கைப்பற்றும் இலக்கிற்கு ஜோகூர் மிக முக்கிய தளம் என்று கருதும் ஹரப்பானுக்கு இது ஒரு பெரும் தடங்களாக இருக்கும்.

ஜோகூரில் ஹரப்பான் வெற்றி பெறுவது மலாய்க்காரர்களின் வாக்குகளை அதன் பக்கம் ஈர்ப்பதில் இருக்கிறது என்று ஒரு முன்னாள் துணை அமைச்சரான கான் இன்று கோலாலம்பூரில் ஒரு கருத்தரங்கில் கூறினார்.

இது ஒரு கடினமான பணியாக இருக்கும், ஏனென்றால் ஜோகூர் மந்திரி பெசார் முகமட் காலெட் நோர்டின் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற்றவராக இருக்கிறார். அப்படியே, மலாய்க்காரர்கள் காலெட் நிருவாகத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்தாலும் அவர்கள் ஹரப்பானுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

ஜோகூர் மலாய்க்காரர்கள் மாநில அரசியின் மீது சினம் கொண்டிருந்தால், அவர்கள் பாஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். இது அவர்களுடைய மனைப்பாங்கு என்றார் கான்.

ஜோகூரில் ஹரப்பான் பெருமளவில் நுழைவது சுலபமல்ல என்று தாம் கருதுவதாக கூறிய கான், ஹரப்பான் வெற்றியை எதிர்பார்க்கக்கூடிய இடங்கள் அதிகமில்லை என்று மேலும் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தில் அதிகப்படியான அந்நிய நேரடி முதலீட்டினால் அம்மாநில மக்கள் ஜிஎஸ்டி மற்றும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றும் கான் கூறினார்.

பெர்சத்து தலைவரும் தற்போதைய பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் முகைதின் யாசின் அங்கு போட்டியில் இறக்கப்படுவார். ஆனால், அவரின் தாக்கம் பாகோ மற்றும் மூவார் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அப்பால் செல்லவில்லை என்று குறிப்பிட்ட கான், முகைதின் அங்கு மந்திரி பெசாராக இருந்திக்கிறர். ஆனால், அது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஜோகூர் அரச குடும்பத்தினர் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளனர். மேலும், அந்த அரச குடும்பத்தினருக்கு முகைதின் மற்றும் பெர்சத்து தலைவர் மகாதிர் முகமட் ஆகியோருடன் தீர்த்துக்கொள்ள வேண்டிய பழையக் கணக்கு இருக்கிறது என்றார் கான்.