மேற்கு பாப்புவா மக்கள் விடுத்துள்ள, சுயநிர்ணய உரிமைக்கான அழைப்பை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும்

நேற்று, 1.8 மில்லியன் மேற்கு பாப்புவா மக்கள் கையொப்பமிட்ட சுயநிர்ணய உரிமைக்கான அழைப்பை, ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மலேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியிடம், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) ஒரு குறிப்பாணையை ஒப்படைத்தது.

பிஎஸ்எம் இளையர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அணி (ஜெரிட்), மக்கள் மேம்பாட்டு கழகம் (சிடிசி), ஜஸ்டிஸ் ஃபோ சிஸ்டர்ஸ், சயா அனாக் பங்சா மலேசியா, தெனாகாநீத்தா, சுவாராம், ராப்பாட் போன்ற உள்நாட்டு இயக்கங்களோடு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த சில இயக்கங்கள் என மொத்தம் 36 அமைப்புகள் அம்மனுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அம்மனுவை, ஐநா-வின் ஒருங்கிணைப்பாளர் ஜுவாநிதா ஜோசப் பெற்றுக்கொண்டார்.

மேற்கு பாப்புவாவின் ஐக்கிய விடுதலை இயக்கம், கடந்தாண்டு ஏப்ரல் 5 முதல் ஜூலை 29 வரை கையெழுத்திடும் பிரச்சாரத்தை நடத்தியது. இந்தோனேசிய அரசாங்கம் இம்மனுவிற்குத் தடைவிதித்ததோடு, அதில் கையெழுத்திட்ட நபர்களைக் கைதும் செய்தது.

மேற்கு பாப்புவா ஐக்கிய விடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவரான யந்தோஅவெர்கியோன், இந்தோனேசியப் போலிசாரால் கைது செய்யப்பட்டு, இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கக்கூடிய, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்நோக்கியுள்ளார் என அக்குழுவிற்கு தலைமையேற்று சென்ற பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் தெரிவித்தார்.

1.8 மில்லியன் மக்கள் கையெழுத்திட்டுள்ள அம்மனுவை, நாடுகடத்தப்பட்ட மேற்கு பாப்புவா தலைவரான பென்னி வென்டால், கடந்த செப்டம்பர் 26, 2017-ஆம் ஆண்டு, காலனித்துவ ஒழுங்குமுறை மீதான ஐ.நா. சிறப்பு குழுவிடம் ஒப்படைத்தார்.

“துரதிருஷ்டவசமாக, ஐக்கிய நாடுகள் சபையின் காலனித்துவ ஒழுங்குமுறை குழு, அம்மனு ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, அப்பிரச்சினை தங்கள் குழு தொடர்புடையது அல்ல என்று கூறிவிட்டது,” என பிஎஸ்எம் சர்வதேசப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சூ சுன் காய் தெரிவித்தார்.

எனவே, பிஎஸ்எம் மற்றும் பிற அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, மனுவை கையளித்துள்ளன :-

  1. 8 மில்லியன் மேற்கு பாப்புவான் மக்கள் கையெழுத்திட்ட மனுவுக்கு ஒப்புதல் வழங்கி, சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதை அங்கீகரிக்க வேண்டும்.
  2. மேற்கு பாப்புவா மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்காக, ஐ.நா. காலனித்துவ ஒழுங்குமுறை சிறப்புக் குழுவின் தீர்மானப் பட்டியலில் மேற்கு பாப்புவாவை மறுபடியும் சேர்க்க வேண்டும்.
  3. மேற்கு பாப்புவாவில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க சிறப்பு பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.

மேலும், மேற்கு பாப்புவா மக்களின் தகவல் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், இயக்கம் அமைப்பதற்கான சுதந்திரம் மற்றும் சிந்தனை சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பிஎஸ்எம் விரும்புகிறது என்றார் சிவராஜன்.

இந்தோனேசிய அதிகாரிகளால், மேற்குப் பாப்புவா மக்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் இனவாத மற்றும் அரசியல் அடக்குமுறைகளைத் தடுக்க அம்மக்களுக்கு சுய நிர்ணய உரிமை அவசியம் என தாங்கள் நம்புவதாக அவர் சொன்னார்.