நாட்டைக் காக்க ஜிஎஸ்டி தேவையில்லை: நஜிப்புக்கு அறிவுறுத்து

பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)தான்   நாட்டைப்  பொருளாதாரச்   சீரழிவிலிருந்து    காப்பாற்றியுள்ளது    என்று    கூறிய   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கைச்  சாடிய    பிகேஆர்    தலைவர்   ஒருவர்,  பிரச்னையெல்லாம்   நிர்வாகத்தில்தான்  என்றார்.

“பிரதமரின்  ‘பிரமாதமான’   கூற்றைக்  கண்டிக்கிறேன்.  ஜிஎஸ்டி  அறிமுகமாகி   மூன்றாண்டுகள்   ஆகியும்   பொருளாதார  வளர்ச்சி   குறைந்துகொண்டே   வருகிறது,  ரிங்கிட்  மதிப்பு   இறங்குமுகமாகவே   இருக்கிறது.

“அப்படியிருக்க   அக்கூற்றில்   உண்மை    எங்கே”,  என   பிகேஆர்  திரெங்கானு  சட்டமன்ற  உறுப்பினர்    அஸான்   இஸ்மாயில்   வினவினார்.

“இருக்கும்  நிலையைப்   பார்த்தால்,  பெருகிவரும்   தேசிய  கடன்களை  அடைப்பதற்கு   அரசாங்கத்துக்கு    உதவியாகத்தான்     ஜிஎஸ்டி  கொண்டுவரப்பட்டிருக்கிறது.

“அம்னோ/பிஎன்   அரசாங்கம்  மக்கள்   பணத்தைப்  பொறுப்பான,   நம்பிக்கையான  முறையில்   பயன்படுத்திக்கொள்ளத்   தவறி  விட்டது”,  என்றாரவர்.

ஜிஎஸ்டி  இன்றியே    நாட்டின்   பொருளாதாரத்தை    மேம்படுத்த   முடியும்   என்று  கூறிய   அஸான்,       ஊழலும்   விரயமுமில்லாமல்  பார்த்துக்  கொண்டாலே  போதும்   என்றார்.