மகாதிரிடமிருந்து இலஞ்சம் பெற்றதை ஒப்புக்கொள்கிறார் இப்ராகிம் அலி

மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அவரிடமிருந்து “மனிதத் தீவனம்” (இலஞ்சம்) பெற்றுக்கொண்டதை மலாய்க்காரர்களின் உரிமைக்குப் போராடும் அமைப்பான பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி நேற்று ஒப்புக்கொண்டார்.

“மகாதிர் எனக்கு கொடுத்தது கொஞ்சமல்ல. நான் அம்னோவில் சேர்ந்த போது ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் நான் அம்னோ உச்சமன்ற உறுப்பினராக்கப்பட்டேன்.

“அவர் என்னை நேசித்தார். எனது வாழ்க்கைக்கு உதவினார். நான் கேட்டுக்கொண்டதற்காக எனக்கு இரண்டு அல்லது மூன்று செயல்திட்டங்களுக்கு அனுமதி வழங்கினார்.

“ஆக, நான் உண்மையிலேயே மற்றவர்களைவிட அதிகமான காலத்திற்கு முன்பே ‘டெடாக்’ (தீவனம்)(மனித் தீவனம்/இலஞ்சம்) வாங்கியுள்ளேன்” என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் இப்ராகிம் அலி கூறினார். அது நேரடியாக முகநூல் வழி ஒலிபரப்பப்பட்டது.

இப்ராகிம் அலி 1981 ஆம் ஆண்டில் அம்னோவில் சேர்ந்தார். அவர் மகாதிருடன் மிக நெருக்கமாக இருந்தார். மகாதிருக்கும் தெங்கு ரசாலிக்கும் இடையே நடந்த பதிவிப் போராட்டத்தின் போது அவர் செமங்காட் 46 இல் 1988 லிருந்து 1991 வரையில் இருந்தார்.

1991 இல் இப்ராகிம் அலி அம்னோவுக்குத் திரும்பினார். அப்போதும் மகாதிர் அவரை நல்லபடியாக நடத்தியாக அவர் கூறினார்.

“1992 இல், எனக்கு எம்பி பதவியைத் தவிர வேறு எந்த அரசியல் பதவியும் இல்லாத போதிலும், ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஓர் உச்சநிலை மாநாட்டிற்கு அனுப்பப்பட்டேன்.

“நான் உலகமுழுவதும் பயணம் செய்ய முடிந்தது…அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே மற்றும் பராகுவே”, என்று இப்ராகிம் அலி கூறினார்.

பொறாமையால் பாதிக்கப்பட்டேன்

தாம் பொறாமையால் பாதிக்கப்பட்டவர் என்று வர்ணித்துக்கொண்ட அவர், அம்னோவுடனான அவரது நெருக்கமான உறவின் காரணமாக கட்சியின் இதர தலைவர்கள் தம்மை வெறுத்தனர் என்று இப்ராகிம் அலி கூறிக்கொண்டார்.

2003 ஆம் ஆண்டு வரையில் 22 ஆண்டுகளுக்கு பிரதமராக இருந்த மகாதிரை தாம் இன்னும் மதிப்பதாக கூறிய இப்ராகிம் அலி, அவர் இப்போது எதிரணிக்குத் தலைமை ஏற்றுள்ளார் என்றார்.

எனினும், தம்மால் எதிரணியில் இருக்கும் மகாதிரை ஆதரிக்க முடியாது, ஏனென்றால் அது மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரின் நலன்களுக்கு உகந்ததல்ல என்று இப்ராகிம் அலி மேலும் கூறினார்.

இப்ராகிம் அலியை மகாதிருக்குப் பின்னர் பிரதமரான அப்துல்லா படாவி அம்னோவிலிருந்து 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு நான்கு மாதங்கள் இருக்கும் போது நீக்கினார்.

2004 ஆண்டுப் பொதுத் தேர்தலில், இப்ராகிம் அலி சுயேட்சை வேட்பாளராக அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டார். ஆனால், தோற்கடிக்கப்பட்டார்.

2008 ஆண்டில், பாஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு பாஸிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அதன் பின்னர், மலாய்க்காரர் உரிமைக்காகப் போராடும் பெர்காசாவை அவர் தோற்றுவித்தார்.

2013 ஆம் ஆண்டில், அம்னோ வேட்பாளரை வெற்றிகரமாக போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வைத்து பாஸுக்கு எதிராக சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இப்ராகிம் அலி, தோல்வி அடைந்தார்.