மாணவி தற்கொலை முயற்சி : அனைத்துத் தரப்பினரையும் போலிஸ் விசாரிக்கிறது

ஆசிரியரின் கைத் தொலைபேசியைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், தற்கொலைக்கு முயன்ற 2-ம் படிவ மாணவி, எம். வசந்தபிரியா வழக்குத் தொடர்பில், போலிசார் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.

அவ்வழக்கை விசாரிக்க அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து தரப்பிற்கும் நியாயமான முறையில் நடந்துகொள்ள இருப்பதாகவும், பினாங்கு மாநிலப் போலிஸ் தலைவர், தெய்வீகன் ஆறுமுகம் தெரிவித்தார்.

“நடந்ததை அறிந்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் விசாரணை செய்வோம்,” என அவர் ஃப்.எம்.தி.-இடம் கூறியுள்ளார்.

தற்போது வசந்தபிரியா மோசமான நிலையில் இருப்பதாகக் கூறிய தெய்வீகன், விரைவில் அவர் நலமடைந்து, போலிஸ் விசாரணைக்கு உதவுவார் என எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தார்

நிபோங் தெபால் மெத்தடிஸ் இடைநிலைப் பள்ளியில் படித்துவந்த, எம் வசந்தப்பிரியா, 13 , தான் திருடவில்லை எனக் கூறியும், தன்னை நம்பாததால் மனம் உடைந்துபோய், தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

கடந்த ஜனவரி 17-ல், குற்றம் சுமத்தப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க ஓர் ஆசிரியரும், இன்னும் இரண்டு ஆசிரியர்களும் அவரை பள்ளி அலுவலகத்தில் அடைத்து வைத்ததாக நம்பப்படுகிறது.

வசந்தப்பிரியவைக் குற்றஞ்சாட்டி, ஏசியதோடு மட்டுமில்லாமல்; திருடியதை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் போலிசில் புகார் செய்யவுள்ளதாகவும் மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. அதன்பிறகு, வசந்தபிரியா கிட்டத்தட்ட 5 மணிநேரம் அறைக்குள் பூட்டப்பட்டு இருந்துள்ளார்.

கைப்பேசியை நான் திருடவில்லை

ஆசிரியர் வசந்தப்பிரியாவை அழைத்துகொண்டு, அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே மாணவியின் பெற்றோரிடம் பேசியப் பிறகு, அவர்களோடு வெளியே சென்றுள்ளார். அச்சமயம் வீட்டில் தனித்து இருந்த வசந்தபிரியா, தனது அறைக்குச் சென்று, ஒரு தாவணியைக் கொண்டு தூக்கில் தொங்கியுள்ளார்.

அதோடுமட்டுமின்றி, ‘டீச்சர், உங்கள் கைப்பேசியை நான் திருடவில்லை’ என்று ஒரு குறிப்பும் எழுதி வைத்துள்ளார்.

தற்போது, செப்ராங் பிறை மருத்துவமனையின் அவசரப் பிரிவில், சுயநினைவற்ற நிலையில் வசந்தபிரியா இருக்கிறார்.

ஆசிரியைப் பணியிட மாற்றம்

இதற்கிடையில், விசாரணையை முடிக்கும் வரை, சம்பந்தப்பட்ட ஆசிரியர், பணியிட மாற்றம் செய்யப்படுவதாகப் பினாங்கு மாநிலக் கல்வி இலாகா நேற்று தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட ஆசிரியை, தென் செப்ராங் பிறை மாவட்ட கல்வி இலாகாவிற்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என மாநிலத் துணைக் கல்வி இயக்குநர் முகமட் ஜாமில் முகமட்  கூறியுள்ளார்.

“தரநிலை நடைமுறைகளின் படி, கல்வி இலாகா சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது. எந்தவொரு தரப்பினர் செய்யும் தவறுகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தொடக்கமாக, விசாரணை முடிவடையும் வரை, சம்பந்தப்பட்ட ஆசிரியர் தென் செப்ராங் பிறை மாவட்ட கல்வி இலாகாவில் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்படுவார்.

“இந்த விஷயத்தில் நாங்கள் போலிசாரோடு ஒத்துழைப்போம்,” என்றும் அவர் தெரிவித்தார்.