ஐஎஸ்ஏ கைது மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

அண்மையில் 13 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரும் அவசரத் தீர்மானம், ‘பாதுகாப்பு’காரணங்களுக்காக அனுமதிக்கப்படவில்லை.

“அதில் பாதுகாப்பு அம்சங்கள்” சம்பந்தப்பட்டிருப்பதால் “பொதுவில் விவாதிக்க இயலாது” என்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா குறிப்பிட்டார்.

“அது பற்றி மேல் விவரங்கள் அறிய விழைவோர் உள்துறை அமைச்சுடன் தொடர்புகொள்ளலாம்”, என்றாரவர்.

மாபுஸ் ஒமார்(பாஸ்-பொக்கோக் சேனா) தாக்கல் செய்த அத்தீர்மானம் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஐஎஸ்ஏ இன்னமும் அமலில் உள்ளதையும் நினைவுப்படுத்தினார்.

“கைது நடவடிக்கை ஐஎஸ்ஏ-இன்கீழ் நடைபெற்றதாக அறிகிறேன்.ஐஎஸ்ஏ இன்னமும் அமலில் உள்ளது.  அதனிடத்தில் புதிய சட்டம் எதுவும் இன்னும் கொண்டுவரப்படவில்லை”, என்றாரவர்.

கைது பற்றி மேல்விவரம் தேவையென்றால் தம்மை அணுகலாம் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)த்துக்கு அழைப்பு விடுத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுஹாகாம் இதற்குமுன்னர் அக்கைது நடவடிக்கையைக் கண்டித்ததுடன் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் அந்த 13 பேரையும் நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தது.

அது அவ்வாறு கூறியதைப் “பொறுப்பற்ற செயல்” என ஹிஷாமுடின் சாடினார்.

‘அரசிடம் நேர்மை இல்லை’

அத்தீர்மானத்தைக் கொண்டுவந்த மாபுஸ், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மலேசிய தின அறிவிப்புக்குப் பின்னர் நிகழ்ந்துள்ள இக்கைது நடவடிக்கை அரசாங்கத்திடம் நேர்மை இல்லை என்பதைக் காண்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் தம் உரையில் விசாரணையின்றிக் காவலில் வைக்க வகை செய்யும் அச்சட்டம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியிருந்தார்.

அதை நீக்குவதற்கான சட்டமுன்வரைவு நாடாளுமன்றத்தின் மார்ச் மாத அமர்வில் கொண்டுவரப்படும் என்று கூறிய ஹிஷாமுடின், அதனிடத்தில் கொண்டுவரப்படும் புதிய சட்டமும் விசாரணையின்றிக் காவலில் வைக்கும் வகைமுறைகளைக் கொண்டிருக்கும்என்றார்.

அந்த 13 பேரும்-ஏழு மலேசியர்கள் ஆறு வெளிநாட்டவர்- நவம்பர் 14-க்கும் 16-க்குமிடையில் தாவாவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக போலீஸ் கூறியது.

TAGS: