மாணவர் உதவித்தொகை கொடுக்கப்படும் நிகழ்வுக்கு பக்காத்தான் பிரதிநிதிகளும் வரலாம்

மாணவர்களுக்கு ரிம100 உதவித் தொகை கொடுக்கப்படும் நிகழ்வுகளுக்குப் பக்காத்தான் ரக்யாட் பிரதிநிதிகள் வருவது தடுக்கப்படவில்லை என்று கல்வி துணை அமைச்சர் வீ கா சியோங் கூறுகிறார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை அமைச்சர், அமைச்சின் அறிக்கை உள்ளூர் தலைவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என்று பணிக்கிறதே தவிர இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களைத்தான் அழைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதை விளக்கினார். 

“பக்காத்தான் தலைவர்களுக்கு இடம் இல்லை என்றோ குறிப்பிட்ட தலைவர்களைத்தான் அழைக்க வேண்டும் என்றோ அது கூறவில்லை”, என்றார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை அழைக்க வேண்டும் என்று கூறுகிறதே தவிர பிஎன் பிரதிநிதிகளைத்தான் அழைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை”.

அதே வேளையில், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களில் பலர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் பெரும்பாலும் பிஎன் தலைவர்களே அழைக்கப்படுவதையும் வீ ஓப்புக்கொண்டார்.

“பள்ளி வாரியங்களில் உள்ளவர்களில் 80 விழுக்காட்டினர் மசீச உறுப்பினர்கள். பள்ளிகளுக்கு நிதி தேவையென்றால் அவர்கள் மசீசவிடம் அல்லது அம்னோவிடம்தான் செல்கிறார்கள்.”

‘பினாங்கில் பிஎன் அழைக்கப்படவில்லை’

பினாங்கில் மூத்த குடிமக்களுக்கு ரிம100 உதவித் தொகை கொடுக்கப்பட்டபோது அந்நிகழ்வுகளுக்கு மாநில டிஏபி அரசு பிஎன் பிரதிநிதிகளை அழைக்கவில்லை என்பதை வீ சுட்டிக்காட்டினார்.

“அதற்காக (பிஎன்) கவலை கொள்ளவில்லை. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது எங்களுக்குத் தெரியும்”, என்றாரவர்.

TAGS: