காலித், ஜயிஸ் பற்றிய கேள்விகளைத் தவிர்க்கிறார்

தேவாலயம் ஒன்றின் மீது ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்திய சோதனை மீது தெளிவான நிலையை எடுப்பதை மாநில அரசாங்கம் இன்னும் தவிர்த்து வருகிறது.

அந்தச் சம்பவம் பற்றிய முழு அறிக்கைக்காகத் தான் காத்திருப்பதாக மட்டும் அது கூறுகிறது.

கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த விருந்து ஒன்றின் போது மதம் மாற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் 12 முஸ்லிம்களை விசாரிப்பதில் ஜயிஸ், சட்ட ரீதியிலான தடைகளை எதிர்நோக்குவதால் அந்த அறிக்கை எப்போது தயாராகும் என தமக்கு நிச்சயமாகத் தெரியாது என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த விவகாரம் மீது அந்த 12 பேரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள், தங்களது கட்சிக்காரர்கள் மீது தங்களுக்கு உள்ள பொறுப்புக்கள் குறித்தும் ஜயிஸின் நிலை மீதும் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை தமது அலுவலகத்துக்கு அனுப்பியிருப்பதாகவும் காலித் தெரிவித்தார்.

அவர் இன்று சிலாங்கூர் மாநில ஆட்சிமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர்  நிருபர்களிடம் பேசினார்.

“விசாரிக்கப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள 12 பேரின் சட்டப்பூர்வக் கருத்து அதுவாகும். நாங்கள் அதனை ஜயிஸின் சட்ட ஆலோசகர்களுக்கு அனுப்பியுள்ளோம். நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் அந்த விஷயத்தைத் தீர்க்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.”

ஜயிஸ் மாநில நிர்வாகத்தில் ஒரு துறையாக இயங்குகிறது என காலித் கேள்வி எழுப்பப்பட்ட போது விளக்கினார். அந்த ஜயிஸ் தான் மேற்கொள்ள எண்ணியுள்ள எந்த நடவடிக்கை பற்றியும் “முதலில் மாநில அரசாங்கத்துடன்தான் கலந்தாய்வு செய்ய வேண்டும்” என்றார் அவர்.

என்றாலும் ஜயிஸ் மீது மாநில அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்ற நேரடியான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை மந்திரி புசார் தவிர்த்தார்.

மாநிலச் சட்டங்களில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்ப அந்த சமய விவகாரத் துறை தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டும் அவர் சொன்னார்.

மாநில அரசாங்கத்துக்கு ஜயிஸ் மீது அதிகாரம் உண்டா இல்லையா என்பதை விளக்குமாறு மீண்டும் கேட்கப்பட்ட போது “சட்டத்தை வாசியுங்கள்” என்று காலித் கூறினார்.

அந்தச் சோதனை மீது ‘வருத்தம்’ தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கை குறை கூறப்பட்டுள்ளது குறித்து அவர் நேரடியாகப் பதில் அளிப்பதையும் அவர் தவிர்த்தார்.

ஜயிஸ் அறிக்கை தயாராகும் வரையில் அனைத்து மாநில ஆட்சிமன்ற உறுப்பினர்களும் மாநில அரசாங்க ஊழியர்களும் அறிக்கை விடுப்பதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் ஏற்கனவே தடை விதித்துள்ளார்.