நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அமைதியாகக் கூடும் மசோதாவுக்கு எதிர்ப்பு பெருகி வருகிறது. மக்களவை அந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்குவதைத் தடுக்கும் பொருட்டு பாஸ் கட்சி நீதித் துறை மறு ஆய்வுக்குக் கொண்டு செல்லத் தயாராகி வருகிறது.
பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் முகமட் ஹட்டா ராம்லி (கோலக் கிராய்), டாக்டர் சுல்கெப்லி அகமட் (கோல சிலாங்கூர்) ஆகியோர் அந்த வழக்கைத் தொடுப்பார்கள். அந்த வழக்கு சோதனை வழக்காக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒன்று கூடுவதற்கும் சாலை ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் உள்ள உரிமையை அந்த அமைதியாகக் கூடும் மசோதா மீறுவதாக மாட் சாபு சொன்னார்.
“பாரிசான் நேசனல் அரசாங்கம் கூறும் காரணம் பொருத்தமற்றது. ஏனெனில் பினாங்கில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் அம்னோ, தெரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இருந்தும் பினாங்கில் அவை முதலீடுகளைப் பாதிக்கவில்லை. மலேசியாவில் அதிகம் முதலீடுகளைக் கவரும் மாநிலமாக அது இன்னும் திகழ்கிறது,” என மாட் சாபு சொன்னார்.
“ஆகவே அமைதியாக ஒன்று கூடுவதற்கு 30 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்புக் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதின் மூலம் அரசாங்கம் ஏன் அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. மியான்மாரில் கூட ஐந்து நாட்களுக்கு முன்பு அறிவித்தால் போதும். நாம் சர்வாதிகார ஆட்சி எனக் கருதும் மியான்மாரைக் காட்டிலும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறோம்.”
மாட் சாபு-உடன் இருந்த பாஸ் உச்ச மன்ற உறுப்பினர் முகமட் ஹனிப்பா மைடின், அந்த மசோதா அரசமைப்புக்கு எதிரானது என்றார்.
“அதனால் நாங்கள் நீதித்துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பிக்கப் போகிறோம். அதன் வழி அந்த மசோதா சட்டமாவதைத் தடுத்து அரசமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்க முடியும். மற்ற நாடுகளில் அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அது முதல் வழக்காக இருக்கும்.”
“அமைதியாக கூடும் மசோதா சட்டமாவதைக் காண நாங்கள் விரும்பவில்லை. அதனை மக்களவை மேலவையும் நிறைவேற்றி யாங் டி பெர்துவான் அகோங் அது சட்டமாவதற்கு அங்கீகாரம் அளிக்கும் வரையில் காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை,” என்றும் ஹனிப்பா சொன்னார்.
ஆகவே அதற்கு எதிராக விரைவாக வழக்குத் தொடுக்க பாஸ் முனைந்துள்ளதற்கு அதுவே காரணம். பாஸ் சட்டக் குழு மசோதாவை ஏற்கனவே ஆய்வு செய்துள்ளது.
அந்த மசோதாவை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் சமர்பித்தார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இரண்டாவது வாசிப்புக்கு அதனை நேற்று தாக்கல் செய்தார்.
பக்காத்தான் ராக்யாட், சிவில் சமூக அமைப்புக்கள், மலேசிய வழக்குரைஞர் மன்றம் ஆகியவை அந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கூடுவதற்கான உரிமையை கூட்டரசு அரசமைப்பின் 10வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம், ஆனால் அந்த உரிமையைத் தடுக்கக் கூடாது என ஹனிப்பா மேலும் விளக்கினார்.
“அரசமைப்பிலிருந்து அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுகிறது. ஆனால் இப்போது கூடுவதற்கான உரிமைக்குத் தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதின் வழி பிஎன் நிர்வாகம் தனது அதிகாரங்களுக்கு புறம்பாக செயல்படுகிறது. அந்த அடிப்படையில் நாங்கள் அந்த மசோதாவை எதிர்க்கிறோம்,” என்றார் அவர்.