பகாங், ரவுப், புக்கிட் கோமானில் தங்கச் சுரங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் சைனைட் இரசாயனம் அங்கு வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கான அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி-பதில் நேரத்தில், தாம் பெற்றுள்ள தகவல்படி தங்கச் சுரங்கத்தில் சைனைட் பயன்படுத்துவதால், அதைச் சுற்றியுள்ள பகுதியில் காற்றுக்கும் (அங்கு குடியிருப்பவர்களின்) உடல்நலத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று சேவியர் கூறினார்.
“அறிவிப்பூர்வமாக, சைனைடுக்கும் தோல் வளர்ச்சி மற்றும் தோல் புற்று நோய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சைனைட் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மேற்கோள் காட்டுவதற்கு நூல்கள் ஏதும் இல்லை”, என்றாரவர்..
சமீபத்திய ஆய்வு ஒன்று சைனைட் நாற்றம் எதையும் வெளிப்படுத்துவதில்லை என்று கூறுவதாக சேவியர் தெரிவித்தார். அந்த ஆய்வின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
சைனைட்டை நீங்கள் எங்கே வைத்தாலும் சரி, அது ஆவியாகி கரியமிலவாயுவாகிவிடும். அதில் மணம் கிடையாது என்று கூறிய சேவியர், பெந்தோங்கில் புழுங்கிய நாற்றம் இருப்பதாக புகார்கள் இருக்கின்றன. அதற்கு அங்குள்ள பெரிய சதுப்பு நிலம் காரணமாக இருக்கலாம் என்று மேலும் கூறினார்.
அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து புக்கிட் கோமான் தங்கச் சுரங்கம் அதன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு விட்டது என்று சேவியர் மேலும் கூறினார்.
அந்தத் தங்கச் சுரங்க உரிமையாளர்கள் சுரங்க நடவடிக்கைகளை இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள உரிமையளிக்கும் குத்தகையைக் கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தங்கச் சுரங்க நடவடிக்கைகள் உடல்நலன்கள் மீது விளைவிக்கும் தாக்கம் குறித்து சுற்றுச்சூழல் போராட்டவாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான வோங் டெக் (பெந்தோங் – ஹரப்பான்) மற்றும் அப்துல் ரஹ்மான் முகமட் (லிப்பிஸ் – பிஎன்) ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு சேவியர் இவ்வாறு பதில் அளித்தார்.