திரங்கானுவில் பெரிய அலைகள், 300 பேர் வெளியேற்றம்

நேற்று 80 பேர் பதிவாகியிருந்த நிலையில், திரங்கானுவில் இரண்டு மாவட்டங்களில் பெரும் அலைகளால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 299 ஆக உயர்ந்துள்ளது.

கெமாமன் மாவட்டத்தில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 285 பேர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திவான் செர்பகுனா கம்புங் குவாலா கெமாமன் மற்றும் பலாய் ராயா கம்புங் கெலிகா பாண்டாய் ஆகிய இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

டுங்குன் மாவட்டத்தில், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 14 வெளியேற்றப்பட்டவர்கள் நேற்று முதல் பண்டார் பாக்கா கிராம அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக் குழு மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி முகமட் நூர் ஒரு அறிக்கையில், ஜனவரி 12 முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை இரு திசைகளிலும் பாண்டாய் செபராங் தாகிர் வழியாகச் சாலையை மூடுவதாக அறிவித்தார்.

“வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் தண்ணீர் நிரம்பி வழிவதால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கவும் இந்தச் சாலை மூடல் அவசியம்,” என்று அவர் கூறினார்.

அதன் சமீபத்திய தனது சமீபத்திய அறிவுறுத்தலில், மலேசிய வானிலை ஆய்வு மையம் ஜனவரி 18 வரை திரங்கானு, கிளந்தான், பகாங் மற்றும் ஜொகூர் கடற்பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வடகிழக்குக் காற்று வீசும், பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்நிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது

சிறிய படகுகள், பொழுதுபோக்கு கடல் நடவடிக்கைகள் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அலைகள் 3.5 மீ வரை உயரக்கூடும் என்று அது கூறியது.

கரையோரத்தில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், கடற்கரையை நெருங்குவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.