நான் உத்தரவிட்டால் கொலை செய்வீர்களா?, அரசு ஊழியர்களை மகாதிர் கேட்கிறார்

 

ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்திற்கு அரசு ஊழியர்கள் சேவை செய்ய வேண்டும், ஆனால் அது குற்றங்கள் புரியும் அளவிற்கு அல்ல என்று பிரதமர் மகாதிர் அரசு ஊழியர்களுக்கு நினைவூட்டினார்.

“நான் உங்களுக்கு கொலை செய்ய உத்தரவிட்டால், அதை நீங்கள் செய்வீர்களா?

“இரண்டு விதமான உத்தரவுகள் இருக்கின்றன. ஒன்று ஒரு குற்றத்தைச் செய்யும்படி கூறுவது, மற்றது சில கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது”, என்று புத்ரா ஜெயாவில் ஒரு டவுன் ஹால் சந்திப்பில் இன்று அவர் கூறினார்.

எதையும் குறிப்பிட்டுக் கூறாமல், அரசு ஊழியர்களுக்கு, போலீஸ் மற்றும் இராணுவ பணியாளர்கள் உட்பட, நன்னெறி கோட்பாடுகளை மீறும் ஓர் உத்தரவுக்குப் பணிய மறுக்கும் உரிமை உண்டு என்று மகாதிர் மேலும் கூறினார்.

ஆனால், சில அதிகாரிகள் கண்மூடித்தனமாக உத்தரவுகளப் பின்பற்றுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

“தவறான ஒன்றை செய்யும்படி ஓர் அதிகாரிக்கு உத்தரவிட்டால், அவர் அதைத் தயங்காமல் செய்கிறார்.

“அவர் .. ஆதாரங்களை மூடிமறைக்கிறார். (அந்தத் தவறான செயல் பற்றி) தகவல் கசியவிடுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இது தவறாகும்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

அரசியல் கட்சிகளுக்குப் பரப்புரை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டால், அதைச் செய்ய மறுக்கும் உரிமை அரசு ஊழியர்களுக்கு உண்டு என்பதையும் மகாதிர் அவர்களுக்கு நினைவூட்டினார்.

“ஓர் அரசியல் கட்சிக்குப் பரப்புரை செய்யும்படி நீங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டால், நீங்கள் ‘முடியாது’ என்று கூற வேண்டும். அவர்கள் (உங்களைக் கேட்டுக்கொள்பவர்கள்) உங்களைத் தண்டிக்க முடியாது. நீங்கள் அனைவரும் ‘முடியாது’ என்று சொன்னால், அவர்கள் எப்படி தண்டிக்க முடியும்?

“நான் அரசு ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு விசுவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால். எங்களில் யாராவது உங்களை சட்டத்திற்குப் புறம்பானவற்றை செய்யச் சொன்னால் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.