இராகவன் கருப்பையா – தனக்கு வீட்டுக் காவல் வேண்டும் என்பது மீதான வழக்கு, விசாரணைக்கு வரவேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் செய்திருந்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் அவ்விவகாரத்தின் பின்னணில் உள்ள சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை.
அவருடைய அவ்விண்ணப்பத்தை அனுமதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்குதான் நீதிமன்றம் கூடியதே தவிர அவருக்கு வீட்டுக்காவலை அனுமதிப்பதற்கு அல்ல என்பதை நிறைய பேர் புரிந்திருக்கவில்லை என்றேத் தோன்றுகிறது.
ஏனெனில் ‘குழம்பியக் குட்டையில் மீன் பிடிப்பதைப் போல’ 2 அரசியல் கட்சிகள் அப்பாவி மக்களைத் திரட்டி அவ்விவகாரத்தை ஊதி பெரிதாக்கி ஆதாயமடைய முற்பட்டது நமக்கு வியப்பளிக்கிறது.
‘நஜிபிற்கு ஆதரவு பேரணி’ எனும் பெயரில் அம்னோ, பாஸ் ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. உள்பட பல அரசியல் கட்சிகள் நீதிமன்ற வளாகத்தில் திரளத் திட்டமிட்டிருந்ததும் காவல்துறை அதற்கு அனுமதி வழங்காததும் நாம் அறிந்ததே.
எனினும் காவல்துறையின் உத்தரவுக்குப் பணிந்து இதர எல்லா கட்சிளும் பின் வாங்கிய நிலையில் பாஸ் கட்சி தனது திட்டத்தைத் தொடர்ந்த பட்சத்தில் ம. இ.கா. தனது உறுப்பினர்களை பத்துமலை திருத்தளத்தில் ஒன்றுத் திரட்டியதுதான் நம் சமூகத்தினரிடையே ஒரு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நஜிபிற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்வதற்கு பத்துமலை வளாகத்தில் கூடுமாறு அக்கட்சியின் துணைத் தலைவர் சரவணன் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அந்தக் கூட்டத்தில் 200கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக ‘மலேசியாகினி’ இணைய ஊடகம் செய்தி வெளியிட்ட போதிலும் 2000திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக சரவணன் கூறியது வியப்பாகத்தான் உள்ளது. ஊழல்வாதிக்கு ஆதரவாக 2,000 பேர் என கூத்தடிப்பது சற்று கேவலமாகத்தான் உள்ளது.
எந்தக் கோயிலாக இருந்தாலும் அரசியல்வாதிகள் உள்பட யார் வேண்டுமானாலும் போகலாம், யாருக்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். அதில் தவறே இல்லை.
ஆனால் அங்கு அரசியல் கூட்டம் நடத்துவதோ உரை நிகழ்த்துவதோ வரம்புக்கு மீறிய செயலாகும் என வெகுசன மக்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
“கடந்த 2007ஆம் ஆண்டில் ஹிண்ராஃப் பேரியக்கத்தின் வழி சமுதாய நலனுக்காக போராட்டம் நடத்திய நம் சமூகத்தைச் சார்ந்த அப்பாவி இளைஞர்களை கோயில் வளாகத்திற்குள் நுழையவிடாமல் அதன் நிர்வாகம் முன் கதவை இழுத்துப் பூட்டிக் கொடுமைப்படுத்தியது.”
“ஆனால் தற்போது அதே நிர்வாகம் உலகின் மிகப் பெரியத் திருடனாக முத்திரைக் குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நஜிப்பிற்கு ஆதரவாக ஆசியல் கூட்டம் நடத்த ம.இ.கா.வுக்கு அனுமதியளிக்கிறது,” என சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கோயில் நிர்வாகத்தையும் மானாவாரியாகச் சாடுகின்றனர்.
நம் சமூகத்தைச் சேர்ந்த சீரிய சிந்தனையாளர்கள் மட்டுமின்றி பிற இனத்தைச் சார்ந்த செயல் திறனாளர்களும் கூட ம.இ.கா.வின் செயலைக் கண்டிப்பதைப் போல வசைப்பாடுகின்றனர்.
“அம்னோவைச் சேர்ந்த ஒரு உலக மகாத் திருடனுக்காக ஏன் நீங்கள் போராடுகிறீர்கள்? உங்கள் இனத்தைச் சார்ந்த நிறைய இளைஞர்கள் ‘சொஸ்மா’ சட்டத்தின் கீழ் அநியாயமாக சிறையில் வாடுகின்றனர். அவர்ளுக்காகப் போராடுங்கள்.”
“மிகச் சிறிய குற்றங்களுக்காக எண்ணற்ற ஏழை இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ஆதரவு பேரணி ஏற்பாடு செய்யுங்கள். ‘மித்ரா’விற்கு ஒதுக்கப்பட்டுள்ளத் தொகையை அதிகரிக்கச் சொல்லி போராடுங்கள்.”
“இவற்றைப் போல உங்கள் சமூகத்திற்கு இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. அவற்றைக் களைவதற்கு குரல் கொடுங்கள். உங்கள் கட்சிக்கு இந்தியர்களின் ஆதரவு மீண்டும் திரும்ப வேண்டுமென்றால் இதனைத்தான் நீங்கள் செய்ய வேண்டும்,” என ஒரு மலாய்க்கார சமூகச் சிந்தனையாளர் ம.இ.கா.விற்கு அறிவுறுத்தியக் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது.
ஆக, அலுவலகங்களில் இருந்தும் கல்லூரிகளிலிருந்தும் விடுப்பு எடுத்துக் கொண்டு பத்துமலையில் கூடிய அந்த 200க்கும் மேற்பட்ட பேரும் இவற்றைத்தான் கருத்தில் கொண்டிருக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட மனிதனான ஒரு மாபெரும் திருடன், வீட்டில் அமர்ந்து கொண்டு உல்லாசத்தை அனுபவிக்கப் போராடியிருக்கக் கூடாது என்பதே வெகுசன மக்களின் ஆதங்கமாகும்.
மக்கள் பணத்தை நஜிப் களவாடியது உண்மைதான் என்பதை நாட்டின் 3 நிலைகளில் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 9 நீதிபதிகள் வழக்கை செவிமெடுத்தப் பிறகுதான் உறுதி செய்யப்பட்டது எனும் விவரத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.