பொது போக்குவரத்துக்கு சிறப்பு மின் கட்டணத்தை அமைச்சகம் முன்மொழிகிறது

ஆபரேட்டர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் பொதுப் போக்குவரத்துத் துறைக்குச் சிறப்பு மின் கட்டணத்தைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிகிறது.

பொதுப் போக்குவரத்து ஆபரேட்டர்களுக்கான தற்போதைய மின்சாரக் கட்டணங்கள் வணிகங்களுக்கான மின்கட்டணத்தைப் போலவே உள்ளது, இது இந்தத் துறைக்கு நிதி ரீதியாகச் சவாலாக உள்ளது என்று அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

“நாங்கள் அமைச்சகத்தில் உரையாற்றும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, பொதுப் போக்குவரத்திற்கான சிறப்பு மின்சார கட்டணத்தை வலியுறுத்துவதாகும்”.

“பொது போக்குவரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க, பொது மற்றும் தனியார் ஆபரேட்டர்களுக்கான சிறப்புக் கட்டணத்தை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,” என்று லோக் கூறினார்.

தற்போதைய கட்டணங்கள் விலை உயர்ந்தவை என்றும், உத்தேச சிறப்பு கட்டணமானது, ஆபரேட்டர்களின் நிதி நெருக்கடியைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிஜிஎஸ் இன்டர்நேஷனல் இன் 17வது ஆண்டு மலேசியா கார்ப்பரேட் தினமான இன்று, CGS International Securities Malaysia வின் சுயாதீன இயக்குநர் ஷஹரில் ரிட்ஸா ரிட்ஸுவான் தலைமையில் நடைபெற்ற மன்றத்தில் லோகே இவ்வாறு கூறினார்.

MRT, LRT மற்றும் Prasarana போன்ற ஆபரேட்டர்கள் தங்கள் இயக்கச் செலவில் 30 முதல் 35 சதவிகிதம் வரை மின்சாரத்திற்காகச் செலவிடுகிறார்கள், அதே நேரத்தில் KTM இன் மின்சாரச் செலவுகள் தற்போதைய அமைப்பின் காரணமாக 35 சதவிகிதம் என்று அவர் மேலும் கூறினார்.