நீதிபதி இந்திரா காந்தி வழக்கிலிருந்து மாற்றப்பட்டேன்

ஈராண்டுகளுக்குமுன் எம். இந்திராகாந்தியின் பிள்ளைகள் ஒருதலைச்சார்ப்பாக மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் முரணான தீர்ப்பு எழுதியதற்காக உயர் நீதிபதி ஒருவர் தம்மைக் கடிந்து கொண்டார் என முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் அனைத்துலக சட்ட மாநாட்டில் தெரிவித்தார்.

முரணான தீர்ப்பாக இருந்தாலும் அதைத் தற்காப்பதில் உறுதியுடன் இருந்ததாக நீதிபதி ஹமிட் சுல்தான் அபு பக்கார் கூறினார்.

ஆனால், அபப்டிப்பட்ட தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி ஹமிட் சுல்தான் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் பொதுநல வழக்குகளை, அரசமைப்புடன் தொடர்புள்ள வழக்குகளை விசாரிக்க அவர் அனுமதிக்கப்படவில்லை.

தம்மைக் கடிந்துகொண்ட உயர் நீதிபதி யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் (இப்போது மக்களவைத் தலைவர்), மா வெங் குவாய், முகம்மட் ஹிஷாமுடின் முகம்மட் யூனுஸ் ஆகியோரை அவர் வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். பல வழக்குகளை அவர்களுடன் சேர்ந்து விசாரித்திருப்பதாக நீதிபதி ஹமிட் சுல்தான் கூறினார்.

அவர்கள் உயர்வாக மதிக்கப்பட்டவர்கள், நீதித்துறையில் ஆற்றல்மிக்க நீதிபதிகள் ஆனால், அவர்களுக்குப் பணி உயர்வு கொடுக்கப்படவே இல்லை என்றாரவர்.