தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் ரஷிட் தேர்தல் சீர்திருத்த குழுவின் தலைவராகிறார்

 

புத்ரா ஜெயா புதிதாக உருவாக்கியிருக்கும் தேர்தல் சீர்திருத்த குழுவிற்கு தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தலைமை ஏற்கிறார்.

அக்குழு இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதன் அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிப்பதுடன் இதர நாடுகளில் வெற்றிகரமான செயல்படும் தேர்தல் அமைவுமுறைகளையும் ஆய்வு செய்யும்.

அவரது நியமனம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெர்சத்துவின் உதவித் தலைவரான அவரை டிஎபியும் பிகேஆரும் அவர் தேர்தல் ஆணையத்தின் தலைவராக நவம்பர் 2000 லிருந்து டிசம்பர் 2008 வரையில் தலைவராக இருந்தபோது அடிக்கடி குறைகூறியுள்ளன.

இக்குழு தற்போதைய தேர்தல் சட்டங்களை ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு சமூக ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு பொருத்தமான தேர்தல் அமைவுமுறையை உருவாக்குவதோடு உலகத்தரத்திலான தேர்தல் அமைவுமுறையை உருவாக்குவதற்கான சட்டங்களை முன்மொழிய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது.

மேலும், ஒரு பராமரிப்பு அரசாங்கத்தைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துவதற்கான சட்டங்களையும்கூட இக்குழு வகுக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சிகளை விதிகளுக்குட்படுத்தும் அதிகாரங்களை தேர்தல் நிர்வாக அமைப்பிடம் (தேர்தல் ஆணையம்) அளிக்க வேண்டும்.

தற்போது, அரசியல் கட்சிகள் மன்றங்கள் பதிவாளரின் (ரோஸ்) அதிகாரத்திற்குட்பட்டு இருக்கின்றன.

பிரதமர் அலுவலகத் தகவல்படி, ரஷிட்டிற்கு இன்னும் பல குழுக்களின் உறுப்பினர்கள் உதவி அளிப்பார்கள். அவர்கள் யார் என்று இன்னும் கூறப்படவில்லை.