60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு செய்துவிட்டோம், டாக்டர் எம்

14-வது பொதுத் தேர்தல் வாக்குறுதிகள் 60-ல், 21-ஐ பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என, நேற்று, ஹராப்பானின் 100 நாள் நிர்வாகத்தின் நிறைவு நாளை ஒட்டிய ஒரு சிறப்பு செய்தியில், துன் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார்.

இது நல்ல ஆட்சியை உறுதிப்படுத்தவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும் பணியாற்றும் புதிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் காட்டுவதாக பிரதமர் தெரிவித்தார்.

“இந்த முயற்சிக்கு, ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த திட்டம் தேவைப்படுகிறது.

“மலேசியாவை மற்றவர்கள் நேர்மைக்காக அறிந்திருக்க வேண்டும், ஊழலுக்காக அல்ல, அந்தக் கொள்கைக்காக புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றும்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா மேற்கோளிட்டுள்ளது.

பக்காத்தார் ஹராப்பான் அரசாங்கம் தொடங்கிவிட்ட சில விஷயங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

ஊழல் தொடர்பான சிறப்பு அமைச்சரவைக் குழு உருவாக்கம், அரசியல் நிதி மசோதா உருவாக்கம், அரசு திட்டங்களுக்கு அமைச்சர் அல்லது துணை அமைச்சரின் ஆதரவு கடிதம் இல்லை மற்றும் பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடை அவற்றுள் அடங்கும்.

அரசாங்கத்தில் ஊழலை ஒடுக்கும் நோக்கமாக, தேசிய ஊழல் எதிர்ப்பு திட்ட வரைவு பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்; தேசிய ஆளுமை மையம், நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு மையம் இவற்றோடு, அரசு நிர்வாக உறுப்பினர்களுக்குப் பரிசுகள் மற்றும் நன்கொடைகளை வழங்குவதற்கான கொள்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.