பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் 2 மாதத்துக்கு இடைநீக்கம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் குற்றஞ்சாட்ட மூத்த மருத்துவர் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுச் சேவை ஆணையம் (பிஎஸ்சி) செப்டம்பர் 14ஆம் நாள் நடத்திய கூட்டத்தில் இடைநீக்கம் செய்யும் முடிவைச் செய்ததாக சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட் கூறினார்.

மருத்துவர்மீதான தடையுத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

த ஸ்டார் நாளேடு ஜூலை 29-இல் ‘மருத்துவமனையில் பாலியல் தொல்லை’ என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்மருத்துவமனை மருத்துவர்கள் பலர், அந்த மூத்த மருத்துவர் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இளம் பெண் மருத்துவர்களிடம் தப்பாக நடந்துகொள்ள முனைந்தார் என்று அந்நாளேட்டிடம் தெரிவித்திருந்தனர்.

அவரின் பாலியல் தொந்திரவுக்கு ஆளான ஒருவர், அலுவல் குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதாக தன்னை அழைத்த மூத்த மருத்துவர் தம் சட்டையின் பித்தான்களைக் கழட்டவும் முத்தமிடவும் முனைந்தார் என்று கூறினார்.

அடிக்கடி வெளியில் அழைத்துச் சென்று முறைகேடாக நடந்துகொள்ள முயல்வாராம். தம் இச்சைக்கு இணங்காவிட்டால் சோதனையில் ‘பெயிலாக்கி விடுவேன்’ என்றும் மிரட்டுவாராம்.

மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இரண்டு மாத காலத்தில் அவர்மீது மேல்விசாரணை நடத்தப்படும் என்றும் சுல்கிப்ளி கூறினார்.

“சுகாதார அமைச்சு அடுத்த வாரம் உள்விசாரணை ஒன்றைத் தொடங்கும். விசாரணை முடிந்ததும் பிஎஸ்சி-இடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். மருத்துவரை பணிநீக்கவும் பரிந்துரைக்கப்படலாம்”, என்றாரவர்.

மருத்துவரைப் பணிநீக்கம் செய்வதா வேண்டாமா என்பதை பிஎஸ்சிதான் முடிவு செய்ய வேண்டும். அதேவேளை, இவ்விவகாரத்தில் தம்மைத் தற்காத்துக்கொள்ளும் முழு உரிமை அம்மருத்துவருக்கு உண்டு என்றும் அவர் சொன்னார்.

மருத்துவரின் தொழில்புரியும் உரிமத்தை மீட்டுக்கொள்ளுமாறு அமைச்சு மலேசிய மருத்துவர் மன்றத்திடம் பரிந்துரை செய்யும் என்றும் சுல்கிப்ளி கூறினார்.