பணிவிலகல் செய்திக்கு ஏஜி மறுப்பு: செய்தித்தளம் மன்னிப்பு கேட்டது

சட்டத்துறைத் தலைவர் டோம்மி தாமஸ் தாம் பணிவிலகியதாகக் கூறும் செய்தியை மறுத்தார்.

“அது சுத்த பொய்”, என்றவர் இன்று பிற்பகல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

டோம்மி தாமஸ் பதவி விலகியதை அரசாங்க வட்டாரமொன்று உறுதிப்படுத்தி இருப்பதாகக் கூறும் செய்தி ஒன்று FMT செய்தித் தளத்தில் வெளியாகி இருந்தது.

“அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குமேல் ஆகும் வேளையில் அதிர்ச்சி அளிக்கும் பணிவிலகல் செய்தி வெளிவந்துள்ளது.

“ஒரு பங்களாவைச் சந்தை விலைக்கும் குறைவான விலையில் வாங்கிய நிதி அமைச்சர் லிம் குவான் எங்மீதான வழக்கு கைவிடப்பட்டதற்காக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் குறைகூறப்பட்டுவரும் வேளையில் இச்செய்தி வந்துள்ளது”, என அது குறிப்பிட்டது.

பிற்பகல் 1.15க்கு பதிவிடப்பட்ட இச்செய்தி அதன்பின்னர் அகற்றப்பட்டது.

பிற்பகல் 1.45க்கு எப்எம்டி அப்படி ஒரு செய்தியை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

“செய்தியைக் கொடுத்தவர்களே அதை மீட்டுக்கொண்டார்கள். நாங்களும் செய்தியை நிபந்தனையற்ற முறையில் நீக்கி சட்டத்துறைத் தலைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்”, என்று அச்செய்தித் தளம் கூறிற்று.