எதிர்வரும் போர்டிக்சன் இடைத் தேர்தலில் அம்னோ தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி. குமார் அம்மான் அங்கு போட்டியிடப் போகிறார்.
14 ஆவது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னரும் தன்னைத் திருத்திக்கொள்ளத் தவறி விட்ட அம்னோவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த இடைத் தேர்தலில் அம்னோ பெரும் தோல்வியடைவதை உறுதி செய்வது தமது முக்கிய நோக்கம் என்று குமார் அம்மான் மேலும் கூறினார்.
நான் பிஎன்னின் கையாள் என்று நினைக்கிறார்கள். உண்மையில் நான் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெறுவதை விரும்புகிறேன். எது முக்கியமானது என்றால், அம்னோ தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
பக்கத்தான் நிருவாகத்தின் மீதும் அதிருப்தி கொண்டுள்ள வாக்காளர்களும் போர்ட்டிக்சனில் இருக்கிறார்கள் என்றும் கூறிக்கொண்டார்.
அவர்கள் ஹரப்பான், பிஎன் போன்றதுதான் என்று நினைக்கிறார்கள். இனிப்பான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். இதனால் பலர் பிஎன்னை விரும்பாத போதிலும் அம்னோவுக்கு வாக்களிப்பார்கள் என்றாரவர்.
எனது கவனமெல்லாம் இந்த 12,000க்கு மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் மீதுதான் என்று அவர் மேலும் கூறினார்.
பிகேஆர் பொதுத் தலைவர் அத்தொகுதியில் பக்காத்தான் சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்கூட்டணிக்கு எதிராக அம்னோ, பாஸ், மஇகா சார்பில் இது வரைக்கும் போட்டியிடுவது யார் என்று இன்னும் அறியப்படமால் இருக்கிறது. மஇகா.வின் பாரம்பரியத் தொகுதியான போர்ட்டிக்சனில் போட்டியிடவிருந்த மஇகா.வின் தேசியத் தலைவர் விலகிக் கொண்டார். அம்னோ தன் வேட்பாளரை நிறுத்தும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அதிருப்தியடைந்த மஇகா களத்தில் இறங்குவதிலிருந்து பின்வாங்கிக் கொண்டது. இந்நிலையில், குமார் அம்மன் சுயேச்சையாக போட்டியிடுவது அம்னோவின் ஆதரவிலா, மஇகா ஆதரவிலா அல்லது தே.மு.யின் ஆதரவிலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஆரூடங்களை எல்லாம் குமார் அம்மன் மறுத்து வருகிறார். அதிக இந்திய வாக்காளர்களைக் கொண்டுள்ள இத்தொகுதியில், தாம் போட்டியிட்டால், அது அம்னோவுக்கு பலத்த அடியாக அமையும். அப்படி அம்னோவை அவமானப்படுத்துவதே தன் நோக்கம் என்று கூறியிருக்கிறார். ஆனால், அவருடைய காரணம் ஏற்புடையதாகக் காணப்படவில்லை. அவர் களத்தில் குதித்திருப்பது எந்த வகையிலும் பிகேஆர் வெற்றி வாய்ப்பையும் மங்கச் செய்யாது; அதே நேரத்தில் அம்னோ அவமானப்படும் அளவுக்கு குறைந்த அளவிளான வாக்குகளையும் பெறாது. மாறாக, சுயேச்சையாகப் போட்டியிடும் குமார், கடந்த காலங்களின் மற்ற இந்திய சுயேச்சை வேட்பாளர்களைப் போல சொற்பமான வாக்குகளையே பெற்று, அவமானப்படுவதே மிச்சம்.
கடந்த 14வது பொதுத் தேர்தலில் குமார் அம்மன், தானா ராத்தா தொகுதியில் பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோற்றுப் போனார். பக்காத்தானை எதிர்த்து, அம்னோவின் தயவோடு, பாஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட குமார், திடீரென்று அம்னோவை அவமானப்படுத்த நினைப்பது ஏன்? இதன் அடிப்படையில் அவர் அம்னோவை அவமானப்படுத்தும் நோக்கத்தைப் பிரதானமாகக் கூறியிருப்பது புத்திக்கு எட்டாத காரியமாக இருப்பதோடு, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கும் துணை போகாது.
போர்ட்டிக்சன் நாடாளுமன்றத்தில் 12 ஆயிரம் இந்திய வாக்காளர்கள் உள்ளனர். தான் வெற்றி பெற்றால் நடப்பு அரசாங்கத்துக்கு நெறுக்குதல் அழிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார். ஆக, குமார் அம்மனுக்கு நேருக்கு நேராக முரண்படும் நோக்கம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒன்று, அம்னோவை அவமானப்படுத்த வேண்டும். மற்றொன்று, பக்காத்தான் அரசாங்கத்துக்கு நெறுக்குதல் கொடுக்க வேண்டும். இன்று அதிக முதிர்ச்சியோடு வாக்களிக்கச் செல்லும் பொது மக்கள் எப்படி இவருக்கு வாக்களிப்பார்கள் என்று தெரியவில்லை.