வாக்குகளை வாங்குவதற்கு ஓராங் அஸ்லிக்கு பணம் கொடுக்கவில்லை என்கிறார் சிவராஜா

 

14 ஆவது பொதுத் தேர்தலின் போது ஓராங் அஸ்லி சமூகத்தின் வாக்குகளை வாங்குவதற்கு அவர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுவதை கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவராஜா இன்று நீதிமன்றத்தில் மறுத்தார்.

கிராமத் தலைவர்களுக்கு அளித்த உதவி அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்று தேர்தல் நீதிமன்றத்தில் அவரது வழக்குரைஞர் முகமட் ஹாபார்ஸாம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் சிவராஜா கூறினார்.

நான் அவர்களுக்கு உதவி அளித்த போது அவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் சொல்லவில்லை, அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறிய அவர், சந்திப்புக்கள் நடந்த போது அவர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களா என்பதுகூட தமக்குத் தெரியாது என்றார்.

இப்போது பகாங் மந்திரி பெசாராக இருக்கும் ஜெலாய் சட்டமன்ற உறுப்பினர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் பெட்ரோலுக்கு (டூய்ட் மிஞ்யாக்) கொடுத்தாரா என்று கேள்விக்கு அவர் பணம் கொடுத்தார் என்பதை சிவராஜா மறுக்கவில்லை.

கொடுக்கப்பட்ட பணம் (ரிம200) அவர்களின் ஐந்து-மணி நேர தொலைதூரப்பயணத்திற்காக கொடுக்கப்பட்டது என்று சிவராஜா கூறினார்.

தாம் ஹெலிக்கோப்டரில் சென்ற போது ஒரு பை நிறையப் பணம் கொண்டுதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

தங்களுடைய பரப்புடையின் போது சிறப்பு போலீஸ் படையினரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் கூட இருந்ததாகவும் அவர் கூறினார்.

டிஎபியின் எம். மனோகரன் தொடர்ந்துள்ள வழக்கில் சிவராஜா ஒரு பிரதிவாதியாக சாட்சியமளித்தார்.

நீதிபதி அஸிஸா நவாவியின்முன் விசாரணை நாளை தொடரும். மந்திரி பெசார் வான் ரோஸ்டி அக்டோபர் 3இல் சாட்சியமளிக்கிறார்.