சொத்து விவர பட்டியல்: முதலிடத்தில் குவான் எங், இரண்டாமிடத்தில் மகாதிர்

எம்ஏசிசி- இடம் தங்களின் வருமான விவரத்தை அறிவித்த பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பார்டி வாரிசான் சாபா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் அந்த ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நிதி அமைச்சர் லிம் குவான் எங். அவருடைய மாத வருமானம் ரிம86, 464. 92. அடுத்த இடத்தில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். மகாதிரின் மாத வருமானம் ரிம75,861.57.

லிம்மைப் பொறுத்தவரை அவரின் துணைவியாரும் பிள்ளைகளும்கூட அவர்களின் சொத்து விவரத்தை அறிவித்திருக்கிறார்கள். மகாதிர் தரப்பில் அவரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா அலி மட்டுமே அறிவித்துள்ளார்.

மகாதிரின் மகன் முக்ரிஸ் இன்னும் அவரின் வருமான விவரத்தைத் தெரிவிக்கவில்லை. அவரையும் சேர்த்து மொத்தம் 77 ஹரப்பான் எம்பிகள் அவர்களின் சொத்து விவரத்தை இன்னும் தெரியப்படுத்தவில்லை.

இதனிடையே, துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

அவரின் கணவர் அன்வார் இப்ராகிம், மகள் நுருல் இஸ்ஸா ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இல்லை.

46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இதுவரை சொத்து விவரத்தை அறிவித்திருப்பதாக எம்ஏசிசி கூறியது.