எம்பி: மூசாமீது முன்பே வழக்குத் தொடுக்காததேன்? கனி விளக்க வேண்டும்

அப்துல் கனி பட்டேல் தாம் சட்டத்துறைத் தலைவராக இருந்தபோது சாபா முன்னாள் முதல்வர் மூசா அமான்மீது ஏன் வழக்குத் தொடுக்க முன்வரவில்லை என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளார் என பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கூறினார்.

கெப்போங் எம்பியான லிம், சாபாவில் பிறந்தவரான கனி மூசாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கத் தயங்கியதற்குக் காரணம் அவர்மீதுள்ள அச்சமா அல்லது இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறதே அதனாலா என்றவர் வினவினார்.

“எனவே, கனி மூசாமீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளார். கனி மூசாவை அல்லது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எண்ணி அஞ்சினாரா, அதனால்தான் மூசாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவில்லையா?

“அல்லது மூசா உறவினர் என்பதால் கனி நடவடிக்கை எடுக்கவில்லையா? கனி இதற்கு விளக்கமளித்து அவர்மீதுள்ள ஐயப்பாட்டைக் களைய வேண்டும்”, என லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.