பிஎன் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, மசீச பிஎன்னைக் கலைக்க வேண்டும் என்று சொல்வது ஏன் என்பதைத் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் ஆனால், அது தன்னிலை உணர்ந்து பேச வேண்டும் என்றும் கூறினார்.
மசீச அதன் ஆண்டுக் கூட்டத்தில் பிஎன் கூட்டணியைக் கலைக்கும் அதிகாரத்தைக் கட்சித் தலைமைக்கு வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
பிஎன்னைக் கலைக்கும் முடிவை மசீச தன்மூப்பாக செய்ய முடியாது. அந்த உரிமை மசீசவுக்குக் கிடையாது. பிஎன் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்து எடுக்க வேண்டிய முடிவு அது.
“பிஎன்னில் ஐந்து கட்சிகள் இருப்பதால் மற்ற நான்குக் கட்சிகளுடனும் அது குறித்து நான் விவாதிப்பேன்.
“பிஎன்னைக் கலைக்கச் சொல்லும் உரிமை மசீசவுக்கு இல்லை. அது ஒரு பரிந்துரைதான் என்றாலும்கூட பிஎன்னில் எந்த முடிவானாலும் அது ஒருமித்த முடிவாய், ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாக இருத்தல் வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்”, என்றாரவர்.
இப்போது பிஎன்னில் அம்னோ, மசீச, இகா, மைபிபிபி, பிபிஆர்எஸ்(பார்டி பெர்சத்து ரக்யாட் சாபா) ஆகிய ஐந்து கட்சிகள் உள்ளன. மைபிபி பிஎன்னில் இருக்கிறதா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. அக்கட்சி உள்பூசலால் இரண்டு பட்டுக் கிடக்கிறது. ஒரு அணி விலக வேண்டும் என்கிறது. இன்னொன்று இருப்போம் என்கிறது.
பிபிஆர்எஸ் பிஎன்னிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு பக்கத்தான் ஹரப்பானில் இணைய முயன்றது. பக்கத்தான் அதை ஏற்கவில்லை என்றதும் பிஎன்னுக்கே திரும்பி வந்தது.