மலேசியத் தமிழ்க்கல்வி தேசிய மாநாட்டில், 11 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன

கடந்த வாரம், பினாங்கில் நடைபெற்ற மலேசியத் தமிழ்க்கல்வி தேசிய மாநாட்டில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, 11 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மலேசியத் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்கான 11 தீர்மானங்கள் :-

 1. இந்தியர்கள் அதிகமாக வாழுமிடங்களில் புதிய ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளை நிறுவ வேண்டும்.
 2. தமிழ்ப்பள்ளிகளை மேற்பார்வையிட, கூடுதலாக ஒரு துணைக் கல்வி அமைச்சர் பதவி உருவக்கப்பட்டு, தகுதி வாய்ந்த ஓர் இந்தியரை அப்பதவியில் நியமிக்க வேண்டும்.
 3. தேசியத் தொடக்கப் பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாட வகுப்புகளை அதிகரிக்க வேண்டும்.
 4. அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் அரசு முழு மானியம் பெரும் பாலர் பள்ளிகளை உருவாக்க, மலேசிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
 5. தேசியத் தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் பணியாற்ற, பயிற்சி பெற்ற போதியத் தமிழாசிரியர்களை அரசாங்கம் தயார்படுத்த வேண்டும்.
 6. பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, இந்தியர்கள் அதிகமாக குடியிருக்கும் மாநிலங்களில், தேசியத் தமிழ் இடைநிலைப் பள்ளிகள் உருவாக்கப்படுவதை விரைவுபடுத்த வேண்டும்.
 7. தமிழ்க்கல்வி பாடத்திட்டத்தை, 4.0 தொழில் புரட்சிக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
 8. கல்வி அமைச்சில், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய நிலையில், மலேசியத் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்காற்றும் வகையில், இந்தியர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும்.
 9. தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், நேரிடையாகவும் வெளிப்படையாகவும் வழங்கப்பட வேண்டும்.
 10. தமிழ்க்கல்வியில் புதிய அணுகுமுறையாக இலக்கவியல், தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல் முறைகளை அமல்படுத்த வேண்டும்.
 11. தேசிய அளவில், தமிழ்க்கல்வி மேம்பாட்டு செயற்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

நிகழ்ச்சியின் இறுதி நாளன்று, இந்த 11 தீர்மானங்களையும் வாசித்த மாநாட்டு செயற்குழுவின் தலைவர் சதிஸ் முனியாண்டி, பேராசியரியர் டாக்டர் பி இராமசாமி தலைமையில், தேசியத் தமிழ்க்கல்வி மேம்பாட்டு செயற்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அக்குழுவில் இந்தியத் தலைவர்கள், ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகளாக  இடம்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாசிக்கப்பட்ட 11 தீர்மானங்களையும், மாநாட்டின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இத்தீர்மானங்கள், பினாங்கு மாநில அரசு சார்பாக, மாநிலத்தின் 2-ஆம் முதலமைச்சர் பி இராமசாமி தலைமையில், கல்வி அமைச்சரின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.