ஐசெர்ட் பேரணி: டிசம்பர் 9-இல் கிளந்தானில் விடுமுறை

பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள கிளந்தான் அரசு, டிசம்பர் 8-இல் கோலாலும்பூரில் பேரணி நடைபெறுவதால் மறுநாளான டிசம்பர் 9-ஐ ஒரு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

விடுமுறை அளித்தால் கிளந்தான் மக்கள் கோலாலும்பூரில் நடக்கும் மாபெரும் பேரணியில் கலந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று மந்திரி புசார் அஹமட் யாக்கூப் கூறினார். எல்லாவகை பாகுபாடுகளையும் எதிர்க்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்)த்தை அங்கீகரிப்பதில்லை என்று கூட்டரசு அரசாங்கம் செய்துள்ள முடிவைக் கொண்டாடுவதற்காக அப்பேரணி நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கிளந்தானில் வேலை நாளாகும்.

இன்று காலை மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஹமட், மலேசியர்கள் அனைவருமே பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

முதலில் ஐசெர்ட் ஒப்பந்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கப்பதற்கு எதிர்ப்புத் தெரிக்கத்தான் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நவம்பர் 3-இல் அதை அங்கீகரிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதை அடுத்து அரசாங்க முடிவைக் கொண்டாடும் பேரணியாக அது உருவெடுத்துள்ளது.