தேசிய உயர்க் கல்விக் கடன் கழகம் (பிடிபிடிஎன்) அதனிடம் கடன் வாங்கியவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பிரச்னைகளை எதிர்நோக்கும் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) கூறுகிறது.
வேலைவாய்ப்புச் சட்டம் 1955-இன்படி வேலையாள் ஒருவரின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அவரின் ஒப்புதல் தேவை என்று எம்டியுசி தலைவர் அப்துல் ஹாலிம் மன்சூர் கூறியதாக மலாய் மெயில் அறிவிக்கிறது.
“வேலையாள் தன் சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கு கடன்வாங்கியவருக்கு(பிடிபிடிஎன்) அல்லது அவரது வங்கிக்கு அதிகாரம் அளிக்கும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டிருக்க வேண்டும்”, என்றவர் அந்த நாளேட்டிடம் தெரிவித்தார்.
அந்த ஒப்பந்தம் முதலாளியின் ஒப்புதலையும் பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய அப்துல் ஹாலிம், அச்சட்டப்படி சம்பளப் பிடித்தம் ஊழியரின் சம்பளத்தில் 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்றார்.
ஆக பிடிபிடிஎன் திட்டம் அவசரப்பட்டு அறிவிக்கப்பட்ட ஒன்று. அதை அறிவிப்பதற்குமுன் சம்பந்தப்பட்ட தரப்புகளைச் சந்தித்து அது பேசியிருக்க வேண்டும்.
“சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கு ஊழியர்களோ முதலாளிகளோ ஒப்புக்கொள்ளாவிட்டால் பிடிபிடிஎன் என்ன செய்யும் என்று எனக்குத் தெரியவில்லை”, என்றவர் சொன்னார்.