ஜொகூர் இளவரசர்: ‘வெளியாள்’ சேவியர், புலாவ் குகுப் விவகாரத்தில் குறுக்கிடாதீர்

 

ஜொகூரின் புலாவ் குகுப் ஒரு தேசியப் பூங்கா என்ற அதன் தகுதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக நீர், நிலம் மற்றும் இயற்கைவளம் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை ஜொகூர் பட்டத்து இளவரசர் குறைகூறியுள்ளார்.

முந்தைய அரசு புலாவ் குகுப்பை தேசிய பூங்கா என்ற தகுதியிலிருந்து அகற்றியுள்ளதையும் அந்நிலம் சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்டது என்று வகைசெய்யப்படும் என்பதையும் ஜொகூர் அரசு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

அந்த நிலம் சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தின்கீழ் வரும், ஆனால் அது ஒரு தேசியப் பூங்காவாக இருக்கும் என்று கூறும் ஜொகூர் மாநில அரசின் கடிதத்தை, அதில் சுல்தானும் கையொப்பம் இட்டுள்ளார், அனுப்பினேன். அந்நிலத்தின் பயன்பாடும் பாதுகாப்பும் மாறாது. அதைப் புரிந்துகொள்வதில் என்ன சிரமம் என்று இன்று முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இளவரசர் கூறுகிறார்.

புலாவ் குகுப்பை அரசாங்கப் பதிவேட்டிலிருந்து அகற்றும் நடவடிக்கையால் அது ஒரு தேசியப் பூங்கா என்ற சட்டத் தகுதியை இழக்கிறது. தேசியப் பூங்கா என்று அது தொடர்ந்து பயன்படுத்தப்படுவது, நிலம் அவருக்குச் சொந்தமானதால், சுல்தானின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

புலாவ் குகுப் ஒரு தேசியப் பூங்காவாக நிலைத்திருக்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவெடுத்தப் பின்னர், சேவியர் அவரது அறிக்கையை வெளியிட்டார்.

ஆனால், “வெளியாள்கள்” ஜொகூர் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று இளவரசர் கூறினார்.

முதலாவதாக, ஒரு வெளியாள் என்ற முறையில், ஜொகூர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உமது குறுக்கீடு தேவையில்லை என்றாரவர்.

இரண்டாவதாக, எந்த அறிக்கை அல்லது கடிதம் வெளியிடப்பட்டிருந்தாலும், ஜொகூர் மாநில அரசமைப்புச் சட்டத்தில் குறுக்கிட்டு அதைப் பயனற்றதாக்குவதற்கான சட்ட அதிகாரம் உமக்கு இல்லை.

அரசமைப்புச் சட்டத்தை மாற்றக்கூடிய ஒரே ஒருவர் ஆட்சியாளர் மட்டுமே. ஜொகூர் வெளியிட்டுள்ள கடிதம் புலாவ் குகுப் ஒரு தேசியப் பூங்காவாக நிலைத்திருக்கும் என்பதைத் தெளிவாக்குகிறது என்றார் ஜொகூர் இளவரசர்.